வரம்பு மீற வேண்டாம்: கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
வரம்பு மீற வேண்டாம்: கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
வரம்பு மீற வேண்டாம்: கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ADDED : ஜூலை 26, 2024 12:26 AM

புதுடில்லி: 'அரசியலமைப்பு அதிகார வரம்புகளுக்கு மீறிய விஷயங்களில் மாநில அரசுகள் தலையிடக் கூடாது' என, வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சர்ச்சை
சமீபத்தில் வெளிநாட்டு ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்களுக்கு செயலராக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி வாசுகியை கேரள அரசு நியமித்தது.
வெளியுறவு விவகாரங்கள் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டுள்ள சூழலில், மாநில அரசின் இந்த நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின், 1ம் எண் பட்டியலில் உள்ள குறிப்பின்படி, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டுடனான எந்த தொடர்பு குறித்த விஷயங்களை கையாளுவதற்கு, மத்திய அரசுக்கு மட்டுமே முழு உரிமை உள்ளது. இது, மாநிலங்கள் கையாள வேண்டிய விஷயமல்ல.
எனவே, அரசியலமைப்பு அதிகார வரம்புக்கு மீறிய விஷயங்களில் மாநில அரசுகள் தலையிடக் கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு.
மிரட்டல்
வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள சமூக விரோத சக்திகள், நம் நாட்டு தலைவர்கள், துாதரக அதிகாரிகள், இந்திய நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் மீது, அந்நாட்டு அரசு வலுவான நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறோம்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அரசுக்கு எதிராக நடந்த போராட்டம் காரணமாக, அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை, 6,700 மாணவர்கள் தாயகம் திரும்பிஉள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.