தோல்வியால் மனம் தளர வேண்டாம் காங்., வேட்பாளர் சம்யுக்தா ஆறுதல்
தோல்வியால் மனம் தளர வேண்டாம் காங்., வேட்பாளர் சம்யுக்தா ஆறுதல்
தோல்வியால் மனம் தளர வேண்டாம் காங்., வேட்பாளர் சம்யுக்தா ஆறுதல்
ADDED : ஜூன் 07, 2024 07:18 AM

பாகல்கோட்: ''லோக்சபா தேர்தல் தோல்வியால், மனம் தளர வேண்டாம். கட்சியை மேலும் பலப்படுத்தினால், அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம்,'' என காங்., வேட்பாளர் சம்யுக்தா பாட்டீல் தெரிவித்தார்.
முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், ஜவுளி மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சிவானந்த் பாட்டீல். இம்முறை லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு வேட்பாளர் பற்றாக்குறை ஏற்பட்டதால், பாகல்கோட் தொகுதியில் போட்டி யிடும்படி, இவரிடம் காங்., மேலிடம் கூறியது.
ஆனால் போட்டியிட மறுத்த அமைச்சர், தன் மகள் சம்யுக்தாவுக்கு சீட் கொடுத்தால், வெற்றி பெற வைப்பதாக வாக்குறுதி அளித்தார். பாகல்கோட் தொகுதியில், எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர் மனைவி வீணாவும், சீட் எதிர்பார்த்தார். இதில் வீணா, சம்யுக்தா இடையே பலத்த போட்டி ஏற்பட்டது.
இறுதியாக சம்யுக்தாவுக்கு மேலிடமும் சீட் கொடுத்தது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார். மகள் தோற்றதால் அமைச்சர் சிவானந்த் பாட்டீல் வருத்தத்தில் உள்ளார்.
பாகல்கோட்டில் சம்யுக்தா, நேற்று அளித்த பேட்டி:
தோல்வியால் தொண்டர்கள் மனம் தளர வேண்டாம். இந்த தோல்வியும் ஒரு வகையில் வெற்றிதான். ஏன் என்றால் 2019 லோக்சபா தேர்தலில், கட்சி வேட்பாளர் பெற்ற ஓட்டுகளை விட, இம்முறை நாம் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளோம்.
மனம் தளராமல், கட்சியை பலப்படுத்தினால் அடுத்த முறை தேர்தலில், முடிவு நமக்கு சாதகமாக இருக்கும். இம்முறை 6.20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், காங்கிரசை ஆதரித்துள்ளனர். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.