மரங்களை வெட்டாதீர்கள் முஸ்லிம் அமைப்பு உத்தரவு
மரங்களை வெட்டாதீர்கள் முஸ்லிம் அமைப்பு உத்தரவு
மரங்களை வெட்டாதீர்கள் முஸ்லிம் அமைப்பு உத்தரவு
ADDED : ஜூன் 03, 2024 11:18 PM

லக்னோ: புவி வெப்பமயமாதலை தடுக்கும் நல்ல நோக்கத்தில், மரங்களை வெட்டுவதையும், பயிர்களை எரிப்பதையும் தவிர்க்கும்படி முஸ்லிம் மதப்பள்ளியின் தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இஸ்லாமிய சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட மதத்தலைவர் பிறப்பிக்கும், 'பத்வா' எனப்படும் ஆணையை, இஸ்லாமியர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்பது வழக்கம்.
இந்நிலையில், நாட்டின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து, முகமது தாரிக் கான் என்பவர், உ.பி.,யின் லக்னோவில் உள்ள இந்திய இஸ்லாமிய மையம் என்ற மதப் பள்ளி தலைவரிடம் விளக்கம் கேட்டார்.
இதற்கு, இந்திய இஸ்லாமிய பள்ளியின் தலைவர் மவுலானா காலித் ரஷீத் பராங்கி மஹாலி பிறப்பித்துள்ள ஆணை:
பசுமையை பராமரிப்பதும், தண்ணீரை சேமிப்பதும், எதையும் விரயம் செய்யாமல் தவிர்ப்பதும் முஸ்லிம்களின் கடமை என, குரானில் கூறப்பட்டு உள்ளது.
எனவே, நாட்டில் எங்கும் மரங்கள் வெட்டப்படாமலும், பயிர்கள் எரிக்கப்படாமலும் இருப்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதி செய்ய வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவனின் கூற்றுப்படி, மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை அளிக்கும் மரக்கன்றுகளை நடுபவர்களுக்கே இறைவனின் வெகுமதி வந்து சேரும்.
எனவே, குளங்கள், கால்வாய்கள், ஆறுகள், கடல்கள் மாசுபடாமல் பாதுகாக்க முயற்சி எடுங்கள்.
மரங்களை வெட்டுவதும், பயிர்களை எரிப்பதும் இஸ்லாம் மதப்படி மிகப் பெரிய பாவம். அந்த பாவத்தை செய்யாதீர்கள்.
இவ்வாறு அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.