தபால் ஓட்டு எண்ணிக்கை தொடர்பான ஒய்.எஸ்.ஆர்.காங்., மனு நிராகரிப்பு
தபால் ஓட்டு எண்ணிக்கை தொடர்பான ஒய்.எஸ்.ஆர்.காங்., மனு நிராகரிப்பு
தபால் ஓட்டு எண்ணிக்கை தொடர்பான ஒய்.எஸ்.ஆர்.காங்., மனு நிராகரிப்பு
ADDED : ஜூன் 03, 2024 11:26 PM

புதுடில்லி: தபால் ஓட்டுகள் தொடர்பாக தேர்தல் கமிஷனின் சுற்றறிக்கையை எதிர்த்து, ஒய்.எஸ்.ஆர்.காங்., தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
தேர்தல் விதிகளின்படி, தபால் ஓட்டு பதிவு செய்ய, 13ஏ விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும்.
இதில், வாக்காளர் கையெழுத்துடன், அதை அனுமதிக்கும் அரசு அதிகாரியின் கையெழுத்தும் இருக்க வேண்டும். மேலும் அந்த அதிகாரியின் பெயர் மற்றும் பதவியுடன், சீல் பதிவு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில், தேர்தல் கமிஷன், சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 'தபால் ஓட்டுகளை அனுமதிக்கும் அதிகாரியின் கையெழுத்து மட்டும் இருந்தால் போதும். பெயர் மற்றும் பதவி இடம்பெறாவிட்டாலும், அந்த தபால் ஓட்டு செல்லும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஆந்திராவுக்கு மட்டும் பொருந்தும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலையும் சந்திக்கும் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்., இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.
தபால் ஓட்டுகளில் யார் வேண்டுமானாலும் கையெழுத்து போட்டு மோசடி செய்ய முடியும் என, வாதிட்டது.
ஆனால், இந்த வழக்கை ஆந்திரா உயர் நீதிமன்றம் நிராகரித்தது. ஓட்டுப்பதிவுக்குப் பின், தேர்தல் வழக்காக தொடரலாம் என்று கூறியிருந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் அரவிந்த் குமார், சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்பதாக கூறியுள்ளது.
ஓட்டுப் பதிவுக்குப் பின், தேவைப்பட்டால் தேர்தல் வழக்காக தொடரலாம் என்று அமர்வு கூறியுள்ளது. இதையடுத்து, ஒய்.எஸ்.ஆர்.காங்.,கின் மனுவை அமர்வு தள்ளுபடி செய்தது.