சிவகுமார் தம்பியை வீழ்த்தி தேவகவுடா மருமகன் வெற்றி
சிவகுமார் தம்பியை வீழ்த்தி தேவகவுடா மருமகன் வெற்றி
சிவகுமார் தம்பியை வீழ்த்தி தேவகவுடா மருமகன் வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 12:56 AM

பெங்களூரு:பெங்களூரு ரூரல் தொகுதியில் துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் தோல்வி அடைந்தார். இங்கு பா.ஜ., சார்பில் போட்டியிட்ட தேவகவுடாவின் மருமகன் டாக்டர் மஞ்சுநாத் வெற்றி பெற்றார்.
லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் கவனம் பெற்ற தொகுதிகளில், பெங்களூரு ரூரலும் ஒன்று. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, சிட்டிங் எம்.பி.,யும், துணை முதல்வர் சிவகுமாரின் தம்பியான சுரேஷ் போட்டியிட்டார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகனான டாக்டர் மஞ்சுநாத் பா.ஜ., வேட்பாளராக களமிறங்கினார்.
பெங்களூரு ரூரல் காங்கிரசின் கோட்டை என்று கூறப்பட்டதாலும், தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளில், ஐந்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருந்ததாலும், சுரேஷ் எளிதில் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது.
ஆனால், இதய சிகிச்சை நிபுணராக இருந்து, பல உயிர்களை காப்பாற்றியவர் என்பதால், மஞ்சுநாத்திற்கு தொகுதியில் மவுசு அதிகரித்தது. மஞ்சுநாத்தை தோற்கடிக்க, சிவகுமார் எவ்வளவோ முயற்சி செய்தார்.
ஆனாலும் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில், சுரேஷை தோற்கடித்து, மஞ்சுநாத் வெற்றி பெற்றுள்ளார்.
தோல்வி அடைந்த சுரேஷ் கூறுகையில், ''மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறேன். டாக்டர் மஞ்சுநாத்துக்கு எனது வாழ்த்துகள். நான் எப்போதும் தொண்டர்களுடன் இருப்பேன். அரசியலில் வெற்றி, தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார்.