குருவாயூர் கோயில் தங்க டாலரை கவரிங் என அவதுாறு வழக்கு தொடர தேவசம் போர்டு முடிவு
குருவாயூர் கோயில் தங்க டாலரை கவரிங் என அவதுாறு வழக்கு தொடர தேவசம் போர்டு முடிவு
குருவாயூர் கோயில் தங்க டாலரை கவரிங் என அவதுாறு வழக்கு தொடர தேவசம் போர்டு முடிவு
ADDED : ஜூலை 17, 2024 07:02 PM
திருவனந்தபுரம்:குருவாயூர் கோயிலில் பக்தருக்கு வழங்கப்பட்ட தங்க டாலரை கவரிங் என அவதூறு பரப்பியவர் மீது வழக்கு தொடர தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கிருஷ்ணனின் உருவம் பொறித்த தங்கம் மற்றும் வெள்ளி டாலர்கள் விற்கப்படுகிறது. இதில் ஒரு தங்க டாலரை பாலக்காடு ஒற்றப்பாலத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பணம் கொடுத்து வாங்கினார்.
இந்நிலையில் அந்த டாலர் கவரிங் என சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டார். பின்னர் அந்த டாலருடன் கோயிலுக்கு வந்த அவர் நிர்வாகிகளை சந்தித்து தனக்கு தந்தது கவரிங் டாலர் என்றும் அதை மாற்றி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து கோயில் நகை மதிப்பீட்டாளரை வரவழைத்து பரிசோதனை செய்தபோது அது தங்க டாலர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதை ஏற்காத மோகன்தாஸ் ஒரு நகைக்கடையில் இதை பரிசோதிக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் கோயில் நிர்வாகத்தில் உள்ள சிலர் மோகன்தாசுடன் ஒரு நகைக் கடைக்கு சென்று அந்த டாலரை பரிசோதனை செய்தபோது தங்க டாலர் என்பது உறுதி செய்யப்பட்டது .மேலும் அங்குள்ள ஹால்மார்க் நிறுவனத்திலும் அந்த டாலர் பரிசோதிக்கப்பட்டதில் தங்கம் தான் என்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து மோகன் தாஸ் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். எனினும் சமூக வலைத்தளங்களில் குருவாயூர் கோயிலில் விற்கப்படுவது கவரிங் என்று பதிவிட்டதால் அவர் மீது வழக்கு தொடர கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.