Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மீண்டும் மூழ்கியது டில்லி; வாகனங்கள் ஸ்தம்பித்தன வெள்ளம் தேங்கியதால் சுரங்க பாதைகள் மூடல்

மீண்டும் மூழ்கியது டில்லி; வாகனங்கள் ஸ்தம்பித்தன வெள்ளம் தேங்கியதால் சுரங்க பாதைகள் மூடல்

மீண்டும் மூழ்கியது டில்லி; வாகனங்கள் ஸ்தம்பித்தன வெள்ளம் தேங்கியதால் சுரங்க பாதைகள் மூடல்

மீண்டும் மூழ்கியது டில்லி; வாகனங்கள் ஸ்தம்பித்தன வெள்ளம் தேங்கியதால் சுரங்க பாதைகள் மூடல்

ADDED : ஜூலை 10, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி:தலைநகர் டில்லியில் மீண்டும் கொட்டும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டில்லி மாநகர் முழுதும் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றன. சுரங்கப் பாதைகளில் வெள்ளம் நிரம்பியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

டில்லியில் கடும் சுட்டெரித்து, தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு இருந்த நிலையில், ஜூன் 28ல் வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மழைநீர் வடிகால்கள் நிரம்பி வழிந்தன.

அதைத் தொடர்ந்து மழை குறைந்து அவ்வப்போது லேசாக சில இடங்களில் பெய்து வந்தது.

இந்நிலையில், லட்சுமி நகர், மத்தியச் செயலகம், டில்லி கன்டோன்மென்ட், பாலம், சப்தர்ஜங், பார்லிமென்ட் சாலை, தில்ஷாத் கார்டன், ஐ.டி.ஓ. மற்றும் கிரேட்டர் கைலாஷ் ஆகிய இடங்களில் நேற்று இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

நரேலா, பவானா, அலிபூர், முண்ட்கா, பஸ்சிம் விஹார், பஞ்சாபி பாக், நஜப்கர், துவாரகா, அக்ஷர்தாம், வசந்த் விஹார், மெஹ்ராலி, சத்தர்பூர் மற்றும் அய நகர் ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டியது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆசாத் மார்க்கெட்டில் இருந்து சாஸ்திரி நகர் செல்லும் சாலை முற்றிலும் மூழ்கியது. ஆசாத் மார்க்கெட் சுரங்கப்பாதை வெள்ளத்தால் மூடப்பட்டது. இதனால் அங்கு வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

அசோகா சாலையில் வின்ட்சர் அரண்மனை ரவுண்டானாவில் கழிவுநீர் குழாய் சேதமடைந்ததால் மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

ராஜதானி பூங்காவில் இருந்து முண்ட்கா செல்லும் சாலை, ரோஹ்தக் சாலை ஆகியவற்றில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. கான்பூர் டி--பாயின்ட்டில் இருந்து ஹம்தார்ட் டி- - பாயின்ட் சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டில்லி - -மீரட் விரைவுச் சாலையில் சராய் காலே கான் அருகே மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

அதேபோல் வஜிராபாத் மேம்பாலம் முதல் காஷ்மீர் கேட் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

சாவித்ரி மேம்பாலத்தின் கீழ், மஹிபால்பூரிலிருந்து ரங்புரி சிக்னல் வரை, நிஜாமுதீன் பாலம், சங்கம் விஹார் முதல் கான்பூர், சாந்த் நகர் மார்க்கெட், தவுலா குவானிலிருந்து மஹிபால்பூர், பாஸ்சிம் விஹார், தீஸ் ஹசாரி சிக்னல் ஆகிய இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜான்ஸி ராணி சாலையில் ஜாண்டேவாலன் மற்றும் முண்ட்கா சிக்னல், சங்கம் விஹார், டெவ்லி ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

வெப்பநிலை நேற்று 33 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. காலை 8:30 மணிக்கு காற்றில் ஈரப்பதம் 84 சதவீதமாக இருந்தது. காற்றின் தரக் குறியீடு காலை 9:00 மணிக்கு 76ஆக பதிவாகி இருந்தது. இது, திருப்தியான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான்


அண்டை மாநிலமான ராஜஸ்தானிலும் தொடர் மழை பெய்து வருகிறது. ஜெய்ப்பூர், சவாய் மாதோபூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டுகிறது.

நேற்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், ஜெய்ப்பூரின் கல்வாட் - 93 மி.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. சவாய் மாதோபூரின் மலர்னா - 85, சவுத் கா பர்வாரா - 69, ஜெய்ப்பூரின் சம்பார் - 78 மற்றும் நாகவுரின் மெர்டா - 57 மி.மீ.ம் மழை பெய்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் ஜோத்பூர், உதய்பூர், கோட்டா, ஜெய்ப்பூர், அஜ்மீர் மற்றும் பிகானீர் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வரும் 11ம் தேதி முதல் மழை குறைய வாய்ப்புள்ளது எனவும் வானிலை நிபுணர்கள் தெரிவித்துஉள்ளனர்.

பா.ஜ., குற்றச்சாட்டு


டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: கனமழையால் தலைநகர் டில்லியில் முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழைநீர் வடிகால்களை கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து சுத்தம் செய்ததாக டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு கணக்கு காட்டியுள்ளது. ஆனால், அனைத்து வடிகால்களும் நிரம்பி வழிந்து சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி மற்றும் மேயர் ஷெல்லி ஓபராய் ஆகியோர் மழைக்காலத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் சில நிமிடங்கள் கொட்டிய மழைக்கே டில்லி மாநகரம் மிதக்கிறது. மாநகரில் உள்ள 750 மழைநீர் வடிகால்வாய்களில், 150 வடிகால்வாய்கள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளன. அவற்றிலும் வண்டல் மண் அகற்றப்படவில்லை. அதனால் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்ட வண்டல் மண் மீண்டும் மழைநீர் கால்வாய்க்குள்ளேயே சென்று விட்டது. பருவமழையை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தை டில்லி அரசு உடனே நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us