குழந்தை தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் டில்லி ஆம் ஆத்மி அரசு உத்தரவாதம்
குழந்தை தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் டில்லி ஆம் ஆத்மி அரசு உத்தரவாதம்
குழந்தை தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை உயர் நீதிமன்றத்தில் டில்லி ஆம் ஆத்மி அரசு உத்தரவாதம்
ADDED : ஜூலை 19, 2024 01:48 AM
இந்தியா கேட்:'நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டு, கொத்தடிமைகளாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிறார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு உறுதியளித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தி வரப்பட்டு, டில்லியில் கொத்தடிமைகளாக பணிபுரிய கட்டாயப்படுத்தப்பட்ட 1,000 சிறார்களை மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பெரும்பாலான குழந்தைகள் கடத்திச் செல்லப்பட்டு, முதலாளியுடன் தங்கியிருக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சிறார்களின் உடல்நலம் மற்றும் உடல் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பப்பட்டு, இரண்டு மாதங்களுக்கும் மேலாகியும், 8 மாவட்ட ஆட்சியர்கள், 16 உதவி ஆட்சியர்களுக்கு பலமுறை நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டும், நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபோன்ற வழக்குகளில் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீட்பு நடத்தப்பட வேண்டும் என்று சட்டம் கட்டளையிடுகிறது.
இவ்வாறு பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் ரோஹ்தாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்: 'சஹ்யோக் கேர் பார் யூ' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணிமிகச்சரியானது.
டில்லியின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி, 245 குழந்தைகள் மற்றும் 772 இளம் பருவத்தினரை மீட்கக் கோரி, அரசுக்கு 18 புகார்களை அனுப்பியுள்ளோம். இவர்கள், தினசரி 12 முதல் 13 மணி நேரம் வரை மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் சுகாதாரமற்ற முறையிலும் கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர்.
மாநில அரசு வழக்கறிஞர் சந்தோஷ் குமார் திரிபாதி: நீதிமன்ற உத்தரவுப்படி மனுதாரருடன் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. அதிகாரியுடன் அவர் எந்த ஒரு தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்வதாக சந்தேகிக்கப்படும் இடங்களின் சரியான முகவரியை மனுதாரர் வழங்கவில்லை. முகவரிகள் அடையாளம் காணப்படாவிட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது கடினம்.
மனுதாரர் ரோஹ்தாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்: அரசு எங்களிடம் எந்த தகவலையும் கேட்கவில்லை. சிறார்களை மீட்க நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயம் செய்ய வேண்டும்.
இருதரப்பு வாதங்களைக் கேட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
அனைத்து விவகாரங்களையும் ஒரே மாதிரி கையாள முடியாது. ஒவ்வொரு சூழ்நிலைக்கும் வெவ்வேறு நடவடிக்கை தேவை. நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளை நம்புவோம்.
பரஸ்பர நம்பிக்கையில் விஷயங்கள் செயல்படுகின்றன. (மனுதாரரை பார்த்து) நீங்கள் அரசுக்கு தகவல் கொடுக்கிறீர்கள். அரசு, மற்ற துறைகளுடன் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும்.
இதற்கு முழுமையான முன்னுரிமை அளிக்க வேண்டும். சில மூத்த அதிகாரிகளை ஈடுபடுத்தி, அதைச் செய்து முடிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, டில்லி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.