வீட்டு உணவு சாப்பிட அனுமதி கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் மனு
வீட்டு உணவு சாப்பிட அனுமதி கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் மனு
வீட்டு உணவு சாப்பிட அனுமதி கேட்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் மனு
ADDED : ஜூலை 10, 2024 04:27 AM

பெங்களூரு, : சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா, துமகூரு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைக்கு செல்லும் முன்பு தர்ஷனின் உடல் எடை 107 கிலோவாக இருந்தது. தற்போது 97 கிலோவாக உள்ளது. 10 கிலோ எடை குறைந்து இருப்பதால் தர்ஷனை, சிறை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் தர்ஷன் தரப்பு வக்கீல்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த ரிட் மனு:
சிறை உணவு ஒத்துக்கொள்ளாததால் தர்ஷனுக்கு அடிக்கடி ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சிறை மருத்துவரிடம் கேட்டபோது உணவு ஒத்துக்கொள்ளாமல் இது போன்று நிகழலாம் என்று கூறியுள்ளார்.
இதனால் தர்ஷனுக்கு வீட்டு உணவு, படுக்கை, புத்தகங்கள் கொடுக்க அனுமதி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது ஓரிரு நாட்களில் விசாரணை நடக்க உள்ளது. சிறை அதிகாரிகள் அளிக்கும் பதிலை வைத்து, தர்ஷனுக்கு வீட்டு உணவு கொடுக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்கும்.
இதற்கிடையில் ரேணுகாசாமி கொலையில் கைதானவர்களிடமிருந்து ஒன்பது வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் இந்த வாகனங்களில் உரிமையாளர்கள் பற்றிய தகவலை அளிக்கும்படி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு, போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
வீட்டு உணவை சாப்பிட அனுமதிக்கும்படி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், நடிகர் தர்ஷன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.