Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கடன், காப்பீடு வழங்குவதாக மோசடி; 'கால்சென்டர்' நடத்தி கோடி கோடியாக சுருட்டல்

கடன், காப்பீடு வழங்குவதாக மோசடி; 'கால்சென்டர்' நடத்தி கோடி கோடியாக சுருட்டல்

கடன், காப்பீடு வழங்குவதாக மோசடி; 'கால்சென்டர்' நடத்தி கோடி கோடியாக சுருட்டல்

கடன், காப்பீடு வழங்குவதாக மோசடி; 'கால்சென்டர்' நடத்தி கோடி கோடியாக சுருட்டல்

ADDED : ஜூலை 08, 2024 01:22 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நொய்டா: 'உங்களுக்கு குறைந்த வட்டியில் அதிக கடன் வாங்கித் தருகிறோம். அதிக பலன்கள் கிடைக்கும் காப்பீட்டு திட்டங்களை வழங்குகிறோம்' என, தொலைபேசி வாயிலாக ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக் கணக்கில் மோசடி செய்த கும்பலை, நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்காக, தனியாக 'கால்சென்டர்' நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலி நிறுவனம்


டில்லியை அடுத்துள்ள உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் உள்ள ஒரு கால்சென்டரில், போலீசார் மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், அந்த நிறுவனம் போலியானது என்பது தெரியவந்தது.

மேலும், போலி கடன் வாக்குறுதிகள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் தொடர்பாக, ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக் கணக்கில் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:


ஒரு பொதுத் துறை வங்கியின் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய ஆஷிஷ் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் இந்த மோசடி கும்பலின் மூளையாக செயல்பட்டனர்.

அந்தக் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றியபோது, 'இண்டியா மார்ட்' என்ற தளத்தில் இருந்து, 2,500 ரூபாய் செலுத்தி, 10,000 பேரின் தொலைபேசி எண்களை வாங்கியுள்ளனர்.

இதன்பின், ஒன்பது பெண்களை வேலைக்கு சேர்த்துள்ளனர். அந்த, 10,000 பேருக்கு தொலைபேசியில் அழைத்து, கடன் திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் வழங்குவதாக பேசுவது இவர்களுடைய வேலை. இதற்காக போலி பெயர்களில் சிம் கார்டுகளை வாங்கிஉள்ளனர்.

இவர்கள் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, பலர் கடன் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் வாங்குவதற்கு முன் வந்தனர்.

அவர்களிடம் இருந்து, கட்டணம் வசூலித்துள்ளனர். போலியான கடன் ஆவணங்கள் அல்லது காப்பீட்டு ஆவணங்களை வழங்கி மோசடி செய்துள்ளனர்.

இந்த பெண்களுக்கு கமிஷன் அடிப்படையில்தான் வருமானம் என்பதால், எந்தளவுக்கு ஏமாற்றுகின்றனரோ, அந்தளவுக்கு பணம் கிடைத்து வந்தது.

இந்தத் திட்டங்களில் சேர்ந்து ஏமாந்தவர்களிடம், கர்நாடகாவைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின், பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் பணத்தை செலுத்த வைத்துள்ளனர்.

அதை, டெபிட் கார்டுகள் வாயிலாக ஆஷிஷ் மற்றும் ஜிதேந்திரா எடுத்துள்ளனர். இதற்காக, அரவிந்த் என்பவருக்கு வங்கிக் கணக்கு வாடகையாக மாதம் 10,000 ரூபாய் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணை


இந்த அனைத்து பரிவர்த்தனைகளையும், ஆஷிஷ், ஒரு டைரியில் எழுதி வைத்துள்ளார். அதன்படி, ஓராண்டுக்கு மேலாக ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து, பல கோடி ரூபாய் அளவுக்கு இவர்கள் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

ஆஷிஷ், ஜிதேந்திரா மற்றும் அவருடைய போலி கால்சென்டரில் பணியாற்றும் ஒன்பது பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us