Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தர்ஷன் மொபைல் போனில் அழிக்கப்பட்ட தகவல்கள் மீட்டெடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி

தர்ஷன் மொபைல் போனில் அழிக்கப்பட்ட தகவல்கள் மீட்டெடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி

தர்ஷன் மொபைல் போனில் அழிக்கப்பட்ட தகவல்கள் மீட்டெடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி

தர்ஷன் மொபைல் போனில் அழிக்கப்பட்ட தகவல்கள் மீட்டெடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி

ADDED : ஜூன் 24, 2024 04:36 AM


Google News
பெங்களூரு, : கொலை வழக்கில் கைதாகி உள்ள நடிகர் தர்ஷனின் மொபைல் போனை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ரேணுகாசாமியை கொலை செய்த பின்னர், மொபைலில் இருந்து சில தகவல்களை, தர்ஷன் அழித்து உள்ளார். அந்த தகவலை மீட்க, மொபைல் போனை ஆய்வு செய்ய போலீசாருக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. கன்னட நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகர். தர்ஷனின் நெருங்கிய தோழியான பவித்ரா கவுடாவுக்கு, ரேணுகாசாமி ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பினார்.

இதனால் கடந்த 8ம் தேதி ரேணுகாசாமியை, தர்ஷன், பவித்ரா உட்பட 13 பேர் சேர்ந்து கடத்தி வந்து அடித்து கொலை செய்தனர். இவர்களையும், சாட்சிகளை அழிக்க முயன்ற நான்கு பேர் என 17 பேரை, பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் கைது செய்தனர்.

* தகவல்கள் அழிப்பு

தற்போது 17 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான 17 பேரின் மொபைல் போன்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தர்ஷன், தன்ராஜ், வினய், பிரதோஷ் ஆகிய நான்கு பேரின், மொபைல் போனிலிருந்து சில தகவல்களை அழித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால் அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் பெற, நான்கு பேரின் மொபைல் போன்களையும் ஆய்வு செய்ய போலீசாருக்கு, பெங்களூரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

மொபைல் போன்களை தடய அறிவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்ப போலீசார் தயாராகி வருகின்றனர். ரேணுகாசாமியை கொலை செய்த பின், வழக்கிலிருந்து தப்பிப்பது குறித்து, தர்ஷன் உட்பட நான்கு பேரும், 'வாட்ஸாப்'பில் குறுந்தகவல் மூலம் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் பலரிடம் மொபைல் போனில் தர்ஷன் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுத்தால், இந்த வழக்கில் மேலும் சில விஷயங்கள் அம்பலமாகும் என்றும் சொல்லப்படுகிறது.

* புதிய சிம்

கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மொபைல் போனை, கொலையாளிகள் கால்வாயில் வீசினர். அதை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் ரேணுகாசாமி பயன்படுத்திய சிம் நம்பரில், புதிய நம்பர் வாங்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அவரது மொபைலில் என்னென்ன தகவல்கள் இருந்தன என்பதை கண்டறியவும் போலீசார் தயாராகி வருகின்றனர்.

.......

...பாக்ஸ்கள்...

அரசியல் செய்யட்டும்

பவித்ரா தரப்பு வக்கீல் நாராயணசாமி அளித்த பேட்டி:

போலீஸ் காவலில் பவித்ராவிடம் பத்து நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இனிமேலும் அவரிடம் விசாரணை நடத்த தேவையில்லை என்பதால், அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வக்கீல்கள் யார் சார்பில் வாதாடுகின்றனரோ, அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வர். இது இயல்பு தான். இந்த கொலை வழக்கு குறித்து அரசியல்வாதி ஒருவர், முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அரசியல்வாதிகள் அரசியல் செய்யட்டும். நீதிமன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

........

* ரசிகர்கள் மீது அன்பு

நடிகை அனுஷா ராய் கூறியதாவது:

நடிகர் தர்ஷன் மிகவும் அன்பானவர், இனிமையானவர். ஆனால் அவருக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம். இதனால் தர்ஷன் உடன் இருப்பவர்கள், அவரது மனநிலை அறிந்து பேசுவர். ரசிகர்கள் மீது தர்ஷனுக்கு அன்பு அதிகம். தர்ஷனின் பெயரை ரசிகர்கள் உடலில் பச்சை குத்திக் கொள்வதை, தர்ஷன் விரும்ப மாட்டார். எந்த நேரம் பார்த்தாலும் ரசிகர்கள், ரசிகர்கள் என்று தான் பேசுவார். ரசிகர்கள் மீது அக்கறை உள்ள அவரால், ஒரு ரசிகரை எப்படி கொலை செய்ய முடிந்தது என்று, எனக்கு இப்போது வரை தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

.......

* எனது வழிகாட்டி

நடிகை ரச்சிதா ராம் கூறுகையில், ''ரேணுகா சாமி கொலை வழக்கு குறித்து விசாரணை நடக்கிறது. ஊடகங்கள் ஒரு சார்பாக பேசக்கூடாது. வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். எனது சினிமா வாழ்க்கைக்கு, தர்ஷன் தான் வழிகாட்டி. கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்கட்டும்,'' என்றார்.

.......

* கார்கள் மீது பிரியம்

நடிகர் தர்ஷனுக்கு கார்கள் மீது அலாதி பிரியம். சந்தையில் ஏதாவது புது கார் வந்தால், அதை வாங்க வேண்டும் என்று நினைப்பார். தற்போது அவரிடம் விலை உயர்ந்த 'போர்டு மஸ்டங், லம்போர்கினி, போர்ஷே, மினி கூப்பர், பார்ச்சூனர், பி.எம் டபிள்யூ., ஆடி, ஜாகுவார், ரேஞ்ச் ரோவர்' ஆகிய கார்கள் உள்ளன. இவருக்கு மைசூரில் பண்ணை வீடு, பெங்களூரில் வீடு, நிலம் உள்ளது.

............

*'பப்'பில் தகராறு

தர்ஷனுக்கு மைசூரு என்றால் ரொம்ப பிடிக்கும். சினிமா சூட்டிங் இல்லாத நேரத்தில், மைசூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு பறந்து விடுவார். அங்குள்ள நண்பர்களுடன் சேர்ந்து பப், பார்ட்டி என மகிழ்ச்சியாக இருப்பார்.

கடந்த 2020ல் மைசூரில் உள்ள 'பப்' பில் வைத்து, தொழிலதிபரான யஷ்வந்த் என்பவருடன், தர்ஷன் தகராறில் ஈடுபட்டார். புனித் ராஜ்குமாரின் பாடலை யஷ்வந்த் போடுமாறு கூறியதால் தகராறு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

யார் இந்த பவித்ரா?

தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா, 34, பெங்களூரு தலகட்ட புராவை சேர்ந்தவர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அதன்பின் திரைப்படங்களின் நடிக்கவும், மாடலிங் துறையில் சாதிக்கவும் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், கணவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் தர்ஷனுக்கும்,பவித்ராவும் தொடர்பு ஏற்பட்டது. கணவரை விவாகரத்து செய்த பவித்ரா, மூன்று கன்னட படங்களில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இதனால் திரைப்படங்களில் நடிப்பதை கைவிட்டார். தற்போது பவித்ரா பெயரில் 10 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது.

ஆர்.ஆர், நகரில் மூன்று மாடி வீடும் உள்ளது. 'ரெட் கார்பெட்' என்ற பெயரில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். பவித்ராவிடம் விலை உயர்ந்த நகைகள், ஆடைகள் உள்ளன. 'ரேஞ்ச் ரோவர், வோக்ஸ்வேகன்' காரும் உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us