தீயணைப்பு வீரர் தோளில் ஏறி மழை பாதிப்பை ஆய்வு செய்த துணை மேயரால் சர்ச்சை
தீயணைப்பு வீரர் தோளில் ஏறி மழை பாதிப்பை ஆய்வு செய்த துணை மேயரால் சர்ச்சை
தீயணைப்பு வீரர் தோளில் ஏறி மழை பாதிப்பை ஆய்வு செய்த துணை மேயரால் சர்ச்சை
ADDED : ஜூலை 28, 2024 11:21 PM

சூரத்: குஜராத்தின் சூரத் நகரில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்த துணை மேயர், தன் உடை சகதியில் படாமல் இருப்பதற்காக தீயணைப்பு வீரரின் தோளில் ஏறிச் சென்ற விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.
குஜராத்தின் சூரத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
இதன் காரணமாக, மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தீயணைப்புப் படை வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மழையால் பாதித்த இடங்களை சூரத் நகரின் துணை மேயரும், பா.ஜ., தலைவர்களில் ஒருவருமான நரேந்திர தேசாய் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சென்ற பகுதியில் சேறும் சகதியுமாக இருந்தது.
இதில் இறங்கி ஆய்வு செய்தால், தான் அணிந்துள்ள உடை, செருப்புகள் சேதமாகும் என எண்ணி, அருகில் இருந்த தீயணைப்புப்படை வீரர் ஒருவரை அழைத்து, தன்னை தோளில் துாக்கிச் செல்லுமாறு கூறினார்.
இதையடுத்து, துணை மேயர் நரேந்திர தேசாயை தீயணைப்புப்படை வீரர், தன் தோளில் துாக்கிச் சென்றார். அப்போது, அருகில் இருந்தவர்கள் தங்கள் மொபைல் போனில், இதை புகைப்படம் எடுத்ததுடன், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
இது, வேகமாக பரவிய நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சூரத் துணை மேயரின் இத்தகைய செயல்பாட்டிற்கு, சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதுடன், எதிர்க்கட்சியினரும் விமர்சித்து வருகின்றனர்.