அவசர நிலை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு; தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
அவசர நிலை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு; தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
அவசர நிலை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு; தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை
ADDED : ஜூன் 26, 2024 08:57 AM

பெங்களூரு : ''நாட்டில் இந்திரா அறிவித்த அவசர நிலை குறித்து கூடுதல் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். அந்த நாள் இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இது குறித்து, மக்களிடம் பா.ஜ., தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, 1975 ஜூன் 25ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா, 'அவசர நிலை'யை அறிவித்தார். இந்த நாளை, பல்வேறு தரப்பினரும் கருப்பு தினமாக கடைபிடிக்கின்றனர். இந்த வகையில், பெங்களூரு 'சமூக நீதிக்கான குடிமக்கள்' என்ற அமைப்பு, வயாலிகாவலில் உள்ள சவுடய்யா மெமோரியல் அரங்கில், நேற்று, 'அவசர நிலை அரசியல் சாசனத்தை அவமதிக்கும் செயல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது.
சிறையில் அடைப்பு
இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
அவசர நிலையின் போது, ஏராளமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் எப்போது வெளியே வருவர் என்று அவர்களுக்கு தெரியாமல் இருந்தது. 21 மாதங்களில் அவசர நிலை முடிவுக்கு வந்தது. ஆனால், 50 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தது போன்ற அனுபவம் ஏற்பட்டதாக சிறையில் இருந்தவர்களுக்கு தெரியும்.
அவசர நிலை குறித்து புத்தகத்தில் படித்து அறிந்து கொண்டேன். நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, அவசர நிலையை நள்ளிரவில் இந்திரா அறிவித்தார். நாளிதழ்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்தார்.
சூப்பர் பிரதமர்
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அவசர நிலை குறித்து நேர்மறையான கதையை சொல்லி வந்தனர். அப்போது, இந்திராவின் மகன் சஞ்சய், சூப்பர் பிரதமாக செயல்பட்டுள்ளார். அவசர நிலை அறிவித்த 1975 ஜூன் 25ம் தேதி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கருப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இது வெறும் கருப்பு நாள் மட்டும் அல்ல. இது போன்று, வருங்காலத்தில் நடக்க கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய நாள். இதற்காகவே இந்த கருத்தரங்கம். பல நெருக்கடிக்கு இடையில், அரசியல் அமைப்பை, அம்பேத்கர் நமக்கு வழங்கினார். அவர் ஒரு மகான்.
அவருக்கு நாம் அனைவரும் நன்றி உள்ளவராக இருக்க வேண்டும். ஆனால், அம்பேத்கரை காங்கிரசார் மிகவும் மோசமாக நடத்தினர். நேரு அரசில், அமைச்சர் பதவியில் இருந்து, அம்பேத்கர் ராஜினாமா செய்தது ஏன். அந்த ராஜினாமா கடிதத்தை நாம் படிக்க வேண்டும்.
கூடுதல் ஆய்வு
காங்கிரசார், ஏழைகள், எஸ்.சி., - எஸ்.டி.,யினருக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அம்பேத்கர் ராஜினாமா கடிதத்தை படித்தவர்கள், உயிருள்ள வரை காங்கிரசாரை மன்னிக்க மாட்டார்கள்.
நாட்டில் இந்திரா அறிவித்த அவசர நிலை குறித்து கூடுதல் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். அந்த நாள் இந்திய வரலாற்றில் கருப்பு நாள். இது குறித்து, மக்களிடம் பா.ஜ., தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர்பேசினார்.
அரசியல் விமர்சகர் ரவீந்திரா, அவசர நிலையின் போது, அதை எதிர்த்து போராடிய காயத்ரி ஹனுமந்தராவ், தலித் சமுதாய பிரமுகர் படாபட் சீனிவாஸ் ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.