சமூக நுண்ணீர் பாசன திட்டத்தில் பெரும் முறைகேடு; கேரள அரசு மீது காங்., குற்றச்சாட்டு
சமூக நுண்ணீர் பாசன திட்டத்தில் பெரும் முறைகேடு; கேரள அரசு மீது காங்., குற்றச்சாட்டு
சமூக நுண்ணீர் பாசன திட்டத்தில் பெரும் முறைகேடு; கேரள அரசு மீது காங்., குற்றச்சாட்டு
ADDED : மார் 13, 2025 09:42 PM
பாலக்காடு; 'சமூக நுண்ணீர் பாசன' திட்டத்தில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக காங்., கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பாலக்காடு மாவட்ட காங்., கட்சி துணைத் தலைவர் சுமேஷ் அச்சுதன் நிருபர்களிடம் கூறியதாவது:
சித்தூர் உட்பட மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு தண்ணீர் வழங்க 'சமூக நுண்ணீர் பாசனம்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டியின் தலைமையில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.
இதற்கு எதிராக, எரித்தேம்பதி-, கொழிஞாம்பாறை தொகுதி காங்., சார்பில் இன்று (14ம் தேதி) காலை, 10:00 மணிக்கு மூங்கில்மடையில், பொதுக் கூட்டம் நடத்த உள்ளோம். கேரள நீர்ப்பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் வாயிலாக, 30 கோடி ரூபாய் செலவில் ஐந்து திட்டங்கள் சித்தூர் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தென்னந்தோப்புகளில், ஆண்டின், 365 நாட்களும் தண்ணீர் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஒரு ஏக்கருக்கு, 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் இந்த திட்டத்திற்கு இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளன.
தினமும் தண்ணீர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியுடன் துவங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் வாயிலாக, ஒரு நாள் கூட முழுமையாக தண்ணீர் வழங்கவில்லை.
ஒரு தென்னை மரத்திற்கு, ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஏற்படும். ஆனால், இத்திட்டத்தில், ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை விஜிலென்ஸ் துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தும் பொதுக்கூட்டத்தை காங்., கட்சியின் மாநில பணித் தலைவர் பிரதாபன் துவக்கி வைக்கிறார். இவ்வாறு, அவர் கூறினார்.