Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சினி கடலை!

சினி கடலை!

சினி கடலை!

சினி கடலை!

ADDED : ஜூன் 16, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
ஆழ்ந்த கவலை

நடிகர் தர்ஷன் நடிக்கும், டெவில் திரைப்பட படப்பிடிப்பு, மைசூரின் லலித மஹால் பேலஸ் உட்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, அக்டோபரில் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். தர்ஷனும் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டியுள்ளது.

ஆனால் அவர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி உள்ளார். இவர் எப்போது வெளியே வருவார் என்பது தெரியாது. அவர் இல்லாமல், படப்பிடிப்பை எப்படி நடத்துவது, எப்படி திரையிடுவது என தெரியாமல், தயாரிப்பாளரும், இயக்குனரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

திருப்புமுனை கதாபாத்திரம்

ஒரு படம் திரைக்கு வரும் போது, படக்குழுவினருக்கு எதிர்பார்ப்பு இருக்கும். குறிப்பாக புதுமுகங்கள் என்றால், ஆர்வம் அதிகமாகவே இருக்கும். லவ் லீ திரைப்படத்தில், ஸ்டெபி படேல் மற்றும் சமீக்ஷா என்ற இரண்டு புதுமுக நடிகையர் நடித்துள்ளனர். இவர்களும் படம் திரைக்கு வருவதையும், தங்களுக்கு திருப்பு முனையாக அமையும் எனவும், எதிர்பார்க்கின்றனர்.

ஸ்டெபி படேலுக்கு, கன்னடத்தில் முதல் படமாகும். நல்ல கதை, கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது, இவரது விருப்பமாகும். இவர், கன்னட மொழியை கற்று வருகிறார். சமீக்ஷா சின்னத்திரை தொடர்களில் நடித்தவர். இப்போது வெள்ளித்திரைக்கு வந்துள்ளார். படத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சர்ச்சை நடிகையின் புது வாழ்வு

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என, பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் நிகிதா துக்ரால். ஆனால் சர்ச்சையில் சிக்கியதால், தொழில் வாழ்க்கை பாழானது. கன்னட நடிகர் ஒருவருடன், காதல் ஏற்பட்டது. அந்த நடிகர் ஏற்கனவே திருமணமானவர். நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு, தன்னை கொடுமைப்படுத்துவதாக, நடிகரின் மனைவி போலீசில் புகார் அளித்தார்.

இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தீவிரமாக கருதிய தயாரிப்பாளர் சங்கம், நிகிதாவுக்கு மூன்று ஆண்டுகள் தடை விதித்தது. இவரை இயக்குனர்கள், சர்ச்சைக்குரிய நடிகையாக கருதினர். இதனால் பட வாய்ப்புகளை இழந்து, திரையுலகை விட்டு விலகினார். தற்போது தொழிலதிபர் ககன் தீப் சிங்கை, திருமணம் செய்து கொண்டு குடும்ப தலைவியாக வாழ்கிறார்.

தேடுதல் வேட்டை

பல்லாரி தர்பார், ஓ மை லவ் உட்பட சில படங்களில் நடித்திருந்த ஸ்மைல் சீனு, தற்போது மண்டேலா என்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ரீதர் பூர்வஜித் இயக்கும் இந்த படம் மாறுபட்ட கதை கொண்டதாகும். 1980 - 90களில் நடக்கும் உணர்ச்சி பூர்வமான கதை. படத்துக்கு இரண்டு நாயகியர் தேவைப்படுகின்றனர். படக்குழுவினர் நாயகியரை தேடி வருகின்றனர். இது கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் தயாராகிறது. ஜூலை முதல் வாரம் படப்பிடிப்பை துவங்க, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். லொகேஷனை தேடுகின்றனர்.

நான்கு பேர் இசை

இயக்குனர் இந்திரஜித் லங்கேஷின் மகன் சமர்ஜித், சான்யா அய்யர் நடிக்கும் கவுரி படம், ஜூலையில் மாநிலம் முழுதும் திரையிடப்படுகிறது. இந்திரஜித் லங்கேஷின் அக்கா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், சில ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் தன் வீட்டு அருகே, மர்ம கும்பலால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

அக்காவின் நினைவாக படத்துக்கு, கவுரி என பெயர் வைத்துள்ளார். படம், இவரது வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல. பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சிக்கமகளூரின், இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதிகளில், படப்பிடிப்பு நடந்து உள்ளது. படத்தில் நான்கு இசை அமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர்.

திருப்புமுனை

நடிகர் விக்ரம் ரவிச்சந்திரன் நடிப்பில், முதோளா திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. ஐந்து நாட்கள் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட போது, விக்ரம் கையில் காயம் ஏற்பட்டது. தற்போது குணமடைகிறார். முழுதும் குணமடைய ஒரு மாதத்துக்கும் மேலாகும் என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இவரை போன்றே 'ஸ்டன்ட்' மாஸ்டர் ரவி வர்மாவும் காயமடைந்தார். படம் வித்தியாசமான கதை கொண்டது. பொதுவாக இத்தகைய கதைகளில் நடிக்க இள வயது நடிகர்கள் தயங்குவர். ஆனால் விக்ரம் அற்புதமான நடித்துள்ளார். இது இவரது தொழில் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையும் என, எதிர்பார்க்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us