Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ சினி கடலை

சினி கடலை

சினி கடலை

சினி கடலை

ADDED : மார் 14, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
* ஆறு கதாபாத்திரங்கள்

பேட் என்ற திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையிலை உள்ளது. சமீபத்தில் படத்தின் காதல் காட்சி படமாக்கப்பட்டது. வெங்கடேஷ் கவுடா தயாரிக்கும் படத்தில் நகுல் கவுடா, மான்விதா நாயகன், நாயகனாக நடிக்கின்றனர். இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், 'படத்தின் முதல் பாடலை வெளியிட்டோம். நாயகனின் வருகைக்காக நாயகி காத்திருக்கிறார். காத்திருக்கும் நேரத்தில் அவர் என்னென்ன கற்பனை செய்கிறார் என்பதை, படத்தில் காட்டியுள்ளோம்.

'அர்ஜுன் ஜன்யா இசை அமைப்பில், அனைத்து பாடல்களும் அற்புதமாக வந்துள்ளன. படத்தில் ஆறு விதமான குணங்கள் கொண்ட, ஆறு கதாபாத்திரங்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு கொண்டு வருவோம்' என்றனர்.

* வியக்க வைத்த நடிப்பு

கடந்த 1970ல் திரைக்கு வந்த நாகரஹாவு திரைப்படத்தில் சாமய்யா வாத்தியார் கதாபாத்திரம் மிகவும் பிரபலம். தற்போது சாமய்யா சன் ஆப் ராமாச்சாரி என்ற பெயரில் திரைப்படம், திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

படத்தை இயக்கிய ராதாகிருஷ்ணா பல்லக்கி கூறுகையில், ''இந்த படத்தின் கதை குறித்து, விஷ்ணுவர்த்தனிடம் விவரித்திருந்தேன். கதையின் சாராம்சத்தையும் கூறினேன். அவர் காலமான பின், படத்தை நிறுத்திவிட்டேன். ஒருமுறை வட மாவட்டத்துக்கு நாடகம் பார்க்க சென்றேன். அதில் நடித்த மூத்த கலைஞர் ஜெயஸ்ரீ ராஜின் நடிப்பை கண்டு வியந்தேன். அதன்பின் பாதியில் நின்ற படத்தை, கையில் எடுத்தேன். பெங்களூரு, பாதாமி, பனசங்கரி, ஐஹொளே உட்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது,'' என்றார்.

* பழைய கட்டடங்கள்

பகத் ராஜ் இயக்கத்தில், டானே திரைப்பட பாடல்கள் வெளியாகியுள்ளன. திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. படத்தின் கதை குறித்து, இயக்குனரிடம் கேட்ட போது, ''20 ஆண்டுகளுக்கு முன், ஊடகம் மற்றும் போலீஸ் நிலையங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மக்களே நியாயத்துக்காக போராட வேண்டி இருந்தது.

''அன்றைய காலத்தில் நாயகன் 'காளி' நியாயம் கேட்டு போராடுவதே, திரைக்கதையின் சாராம்சம். பழைய கட்டடங்கள், இடங்களை தேடி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நாடக கலைஞர் பிரவீண் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக விதுஷி ஹரினாக்ஷி நடித்துள்ளார். கிரைம், திரில்லர் கதை. படப்பிடிப்பு முடிந்துள்ளது. திரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்கிறோம்,'' என்றார்.

* வசன உச்சரிப்பு

ரெட், பிகில், காளி' உட்பட, 10க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த நடிகை அம்ருதா அய்யர், அரஸ் அந்தாரே இயக்கும் புதிய படம் மூலமாக, கன்னடத்தில் அறிமுகமாகிறார்.

இது குறித்து, இயக்குனர் கூறுகையில் ''கணேஷ் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு, நாயகியை தேடினோம். தெளிவாக கன்னடம் பேசும் புதுமுகம் தேவைப்பட்டது. கடந்தாண்டு திரைக்கு வந்த ஹனுமான் படத்தை பார்த்தேன். அதில் நாயகியாக நடித்த அம்ருதா அய்யர், கன்னட பெண் என்பது தெரிந்தது.

''அவரது வசன உச்சரிப்பு நன்றாக இருந்தது. உடனடியாக அவரை சந்தித்து பேசி, ஒப்புதல் பெற்றோம். அவருக்கு கதை பிடித்ததால் சம்மதித்தார். நாங்கள் நாயகிக்காக அதிகம் கஷ்டப்படவில்லை. இந்த படத்தில் கணேஷ், அம்ருதாவுடன் ரமேஷ் இந்திரா, ரங்காயணா ரகு உட்பட பலர் நடிக்கின்றனர்,'' என்றார்.

* தமிழ், மலையாளம்

கன்னடத்தில், 'ஜொதெ ஜொதயலி' தொடர் மூலம், நடிகையான மேகா ஷெட்டி, அதன்பின் 'டிரிபிள் ரைடிங்' படம் மூலம், வெள்ளித்திரையில் நாயகியாக உயர்ந்தார். அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றார். தமிழ் படங்களிலும் நடிக்கிறார்.

இது குறித்து, மேகா ஷெட்டி கூறுகையில், ''நடிகர் வினய் ராஜ்குமாருடன், கிராமயணா என்ற படத்தில் நடிக்கிறேன். இன்னும் 25 முதல் 30 நாட்கள் படப்பிடிப்பு பாக்கியுள்ளது. பிரஜ்வல் தேவராஜுடன் சீத்தா படத்திலும் நடிக்கிறேன். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில், திரைக்கு வரும். தமிழிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்றேன். மலையாளத்திலும் நடிக்கிறேன்,'' என்றார்.

* எதிர்பாரா வெற்றி

நோடிதவரு ஏனந்தாரே படக்குழுவினர், செம குஷியில் உள்ளனர். படம் திரைக்கு வந்து 50 நாட்களை தாண்டி ஓடுவதே, இதற்கு காரணமாகும். இது குறித்து, இயக்குனர் குலதீப் கூறுகையில், ''ஒரு சிறிய கனவால், உருவான கதையே, நோடிதவரு ஏனந்தாரே படமாகும். படத்துக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என, நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை பொருத்தவரை இது பெரிய வெற்றியாகும். இதற்கு காரணமான அனைவருக்கும், நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். ஆண்டுக்கு 200 முதல் 300 படங்கள் திரைக்கு வருகின்றன. ஆனால் மக்களின் மனதில் இடம் பிடிப்பது 10 முதல் 15 படங்கள் மட்டுமே. இந்த பட்டியலில் எங்களின் படமும் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us