பாலியல் தொழிலுக்காக வங்கதேச சிறுமியர் கடத்தல்
பாலியல் தொழிலுக்காக வங்கதேச சிறுமியர் கடத்தல்
பாலியல் தொழிலுக்காக வங்கதேச சிறுமியர் கடத்தல்
ADDED : மார் 14, 2025 06:34 AM

புதுடில்லி : வங்க தேசத்தில் இருந்து நம் நாட்டுக்குள் பாலியல் தொழிலுக்காக சிறுமியர் கடத்தப்படுவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் பாலியல் தொழில் தொடர்பாக, அம்மாநில போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், தேசிய புலானாய்வு அமைப்பினரும், அமலாக்கத் துறையினரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதில், நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சிறுமியரை சட்ட விரோதமாக அழைத்து வந்தது தெரிந்தது.
மேற்கு வங்க மாநில எல்லை வழியாக, நம் நாட்டுக்குள் அழைத்து வரும் ஏஜன்டுகளுக்கு, ஒரு சிறுமிக்கு தலா 5,000 ரூபாய் வீதம், பாலியல் தொழில் நடத்துபவர்கள் கொடுக்கின்றனர். இந்த சட்டவிரோத செயலில், வங்கதேசத்தினர் அதிக அளவில் ஈடுபடுவதாகவும், நம் நாட்டின் போலி ஆவணங்களை அவர்கள் தயார் செய்ததாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
பாலியல் தொழிலை ஹைதராபாதில் பலர் நடத்தி வருவதாகவும், கமிஷன் அடிப்படையில் சிறுமியரை வேறு ஊர்களுக்கு அனுப்பி வைத்ததும், ஹவாலா முறையில் வங்கதேசத்துக்கு பணத்தை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், இதில் தொடர்புடைய முக்கிய புள்ளியான ருகுல் அமீன் என்பவரின் சொத்துகள் மற்றும் அவரது வங்கி கணக்கில் இருந்த, 1.90 லட்சம் பணத்தை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது.