
திடீர் மவுசு
பொதுவாக கன்னட நடிகையருக்கு, வேறு மொழிகளில் மவுசு அதிகம் என்பதை, பலர் நிரூபித்துள்ளனர். ராஷ்மிகா மந்தண்ணா, ஸ்ரீலீலா, ஆஷிகா ரங்கநாத் என, பட்டியல் நீள்கிறது. தற்போது இவர்களின் வரிசையில் நடிகை சைத்ரா ஆச்சாரும் சேர்ந்துள்ளார். இவர் கன்னடத்தில் பேக் டு பேக் படங்களில் நடிக்கும் இவருக்கு, தமிழிலும் 'ஆபர்' வந்துள்ளது. ஏற்கனவே சசிகுமார் நடிக்கும் படத்துக்கு, நாயகியான இவர், மற்றொரு படத்துக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படத்துக்கு, நாயகியாக தேர்வு ஆகி உள்ளார். தமிழில் இருந்து, தெலுங்கு திரையுலகுக்கு தாவினாலும் ஆச்சரியப்பட முடியாது.
புதுமை பிரசாரம்
திரைப்படங்களை மக்களிடம் கொண்டு செல்ல, படக்குழுவினர் பல விதமான சர்க்கஸ்களை செய்வது சகஜம். புதுப்புது வழிகளில் பிரசாரம் செய்வர். நடிகர் துருவா சர்ஜா நடிக்கும், மார்ட்டின் படக்குழுவினரும், புதுமையான வழியை கண்டுபிடித்துள்ளனர். படத்தின் டிரெய்லரில், நாயகனை அறிமுகம் செய்யும் பாடல், ரொமாண்டிக் பாடல் என, எதை முதலில் பார்க்க விரும்புகின்றனர் என்பதை, ரசிகர்களே தேர்வு செய்து கொள்ளலாம். இதன்படியே டிரெய்லர் வெளியாகும். இப்படத்துக்காக துருவா சர்ஜா, அதிகமாகவே மெனக்கெட்டுள்ளார். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் படம், அக்டோபர் 11ல் உலகம் முழுதும் திரையிடப்படுகிறது. இது ஆக்ஷன், திரில்லிங் கதை கொண்டதாகும்.
மிரட்டலான காட்சிகள்
மெக்கானிகல் பொறியாளரான அவினாஷ், திரைப்பட இயக்குனராக மாறியுள்ளார். இவர் முதன் முறையாக இயக்கும், ஹக்கா திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. சமீபத்தில் இயக்குனர் சந்துரு, டீசர் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். படத்தில் அனு பிரபாகர், ஹர்ஷிகா பூனச்சா, வேணு உட்பட பலர், முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனு பிரபாகரின் கதாபாத்திரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷிகா பூனச்சா பத்திரிகையாளராக நடிக்கிறார். இவர் செய்தி சேகரிக்க ஒரு கிராமத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை சுற்றி கதை நகரும். ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டு வரும், மிரட்டலான காட்சிகள் படத்தில் உள்ளதாம்.
மன அழுத்தம் படுத்தும் பாடு
மனிதர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தங்களை மையமாக கொண்டு, சாங்கே என்ற பெயரில், திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. இளைஞர் ஒருவர் திருமணமாகி, குழந்தை பெற்றால் மட்டுமே தன் வாழ்க்கை முழுமை அடைகிறது என, நம்புகிறார். ஆனால் திருமணமாகி சில ஆண்டுகளாகியும், குழந்தை பிறப்பதில்லை. இதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகும் அவர், இயல்பு நிலை மாறுகிறார். தன் செயல்பாடுகளால், தன்னை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையை எப்படி அபாயத்தில் சிக்க வைக்கிறார் என்பதே, கதையின் சாராம்சம். கன்னடத்தில் இது புது முயற்சி என, படக்குழுவினர் கூறுகின்றனர். ஜோத்னா ராஜ் இயக்கும் இந்த படம், இம்மாதம் 26ல் திரைக்கு வருகிறது.
ஸ்டைலிஷ் வில்லன்
நடிகர் மித்ரா என்ற பெயரை கேட்டாலே, தானாக சிரிப்பு வரும். 2003ல் திரையுலகில் நுழைந்த இவர், இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ஒவ்வொரு படத்திலும், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். வெள்ளித்திரை மட்டுமின்றி, பல தொடர்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். நகைச்சுவை நடிகரான இவர், இப்போதே முதன் முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். திரைக்கு வர தயாராகும் கராவலி என்ற படத்தில், நீளமான வெள்ளை தாடி வைத்த ஸ்டைலிஷ் வில்லனாக தென்படுகிறார். கன்னடத்துடன், சில தமிழ் படங்களிலும் வில்லனாக நடிக்கிறார்.
முழு நேர நடிகை
நடிப்பு பின்னணி இல்லாமல், திரையுலகில் நுழைந்து சாதனை செய்தவர்கள் ஏராளம். அவர்களில் லியோனில்லா ஸ்வேதாவும் ஒருவர். தட்சிணகன்னடாவின் பஜ்ஜேவை சேர்ந்த இவர், மங்களூரில் பி.யு.சி., முடித்த இவர், பொறியியல் படிப்புக்காக பெங்களூரு வந்தவர். படிப்பு முடிந்து சாப்ட்வேர் கம்பெனியில் பணிக்கு சேர்ந்தார். முதலில் குறும்படம் மூலமாக நடிப்பு பயணத்தை துவங்கிய இவர், ஒய் நாயகியாக அறிமுகமானார். இதற்கு முன் பணிக்கு விடுமுறை போட்டு, படப்பிடிப்பில் பங்கேற்றார். பட வாய்ப்புகள் அதிகரிப்பதால், வேலைக்கு முழுக்கு போட்டு முழு நேர நடிகையாகிவிட்டார். தற்போது இவர் நடித்த ஹெஜ்ஜாரு திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது.