
கடிதங்களில் காதல்
கன்னடத்தில் காதலை பலவிதமாக கூறிய திரைப்படங்களுக்கு பஞ்சம் இல்லை. இந்த வரிசையில் காகதா திரைப்படமும் சேர்கிறது. சமீபத்தில் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் ஆர்வத்தை துாண்டியது. இந்த படம் ஜூலை 5ல் திரைக்கு வருகிறது. 2005ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, திரைக்கதை பின்னியுள்ளனர். மொபைல் போன்கள் இல்லாத காலத்தில், கடிதங்களில் காதலை பரிமாறி கொண்ட கதையாகும். தீரா பகையுடன் உள்ள இரண்டு கிராமங்களை சேர்ந்த பெண்ணுக்கும், இளைஞருக்கும் காதல் மலர்கிறது. அனைத்தையும் விட, மனிதத்தன்மை மிகவும் அவசியம் என்பதை, படத்தில் காண்பித்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான அங்கிதா ஜெயராம் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
பாடல் ஏற்படுத்திய மாற்றம்
பாடகர்கள் அரிதாரம் பூசி, திரைப்படங்களில் நடிப்பது புதிய விஷயம் அல்ல. பின்னணி பாடகர் சஞ்ஜித் ஹெக்டேவும், இளம் நடிகை சஞ்சனா தாசுடன் ஆட்டம் போட்டுள்ளார், ஆனால் இது திரைப்பட பாடல் அல்ல. சஞ்ஜித் தாஸ் தன் குழுவுடன் சேர்ந்து எழுதி, நடனமும் ஆடியுள்ளார். இளம் காதலர்களுக்கான இந்த பாடல் அமோக வெற்றி பெற்றது. இந்த பாடல் சஞ்ஜித் ஹெக்டேவின் வாழ்க்கையில், மாற்றங்களை ஏற்படுத்தியதாம். இந்த பாடலை நாகார்ஜுன் ஷர்மா எழுதி இசை அமைத்துள்ளார்.
மும்பையில் கூடாரம்
ராஷ்மிகா மந்தனாவுக்கு, கன்னட திரையுலகம் மறந்து விட்டதா என, ரசிகர்கள் குமுறுகின்றனர். கன்னடத்தில் கிரிக் பார்ட்டி மூலமாக திரை பயணத்தை துவக்கிய இவர், திரும்பி பார்க்க நேரமில்லாமல் நடிக்கிறார். கன்னடத்தில் பட வாய்ப்புகள் குறையாத நிலையில், தெலுங்கு திரையுலகுக்கு சென்றார். அங்கு 'ஸ்டார்' நடிகர்களுடன் ஹிட் படங்களை கொடுத்து, தனக்கென தனியிடத்தை பிடித்துள்ளார். அதன்பின் பாலிவுட்டுக்கு சென்று, அமிதாப் பச்சனுடன் நடித்தார். அடுத்தடுத்த ஹிந்தி படங்களில் நடிக்கிறார். இப்போது சிகந்தர் என்ற படத்தில், சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். கன்னட திரையுலகை ஓரங்கட்டி, மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பது சகஜம்தானே என, ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஐந்து ஆண்டுக்கு பின்...
நடிகர் விஹான், ஐந்து ஆண்டுகளுக்கு பின் நடிப்புக்கு திரும்பினார். சந்திரஜித் பெள்ளியப்பா இயக்கும், இப்பனி தப்பித இளெயலி என்ற படத்தில் விஹான் நாயகனாக நடிக்கிறார். படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. முதல் பாடலை, படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். தீக்ஷித் நடனம் அமைத்த இப்பாடலை, கபில் கபிலன் பாடியுள்ளார். இது அழகான காதல் கதையாம். ஐந்து ஆண்டுக்கு பின், நாயகனாக நடிப்பதால் படத்தை விஹான் மிகவும் எதிர்பார்க்கிறார். இவருக்கு ஜோடியாக அங்கிதா அமர் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு கொண்டு வர, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்கள் நிறுத்தம்
கன்னடத்தில், பிரம்மச்சாரி, ஐ லவ் யு உட்பட, சில படங்களில் நாயகியாக நடித்தவர் அக்ஷிதா போப்பையா. இவரும் குடகை சேர்ந்தவர். இவர் முதலில் தமிழ் தொடர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன்பின் கன்னடத்தில் நாயகியாகும் வாய்ப்பை பெற்றார். இப்போது தமிழ் திரைப்படம் ஒன்றில், நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறதாம். தற்போது கன்னடத்தில் கர்நாடக அளியா, மிஸ்டர் அண்ட் மிசஸ் என, இரண்டு படங்களில் நடிக்கிறார். திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. பட வாய்ப்புகள் அதிகரிப்பதால், தொடர்களில் நடிப்பதை அக்ஷிதா நிறுத்திவிட்டார்.
தாயாக ஸ்ருதி
நடிகர் தர்ஷன் நடிப்பில், திரைக்கு வந்த மெஜஸ்டிக் சக்கை போடு போட்டது, அனைவருக்கும் தெரியும். தற்போது மெஜஸ்டிக் 2 திரைப்படம் திரைக்கு வர தயாராகிறது. பெங்களூரின் இதய பகுதியான மெஜஸ்டிக்கில் நடக்கும் சம்பவங்களை, மையமாக கொண்டு, திரைக்கதை பின்னியுள்ளனர். இந்த படத்தில் நடிகை ஸ்ருதி, நாயகனுக்கு தாயாக நடிக்கிறார். இவரை வில்லன் கும்பல் கடத்தி செல்கிறது. நாயகனும், இவரது நண்பரும் தாயை தேடி கண்டுபிடிக்கின்றனர். கிளைமாக்ஸ் படப்பிடிப்பு முடிந்துள்ளது. நாயகியாக சம்ஹிதா நடிக்கிறார்.