சிக்கமகளூரு சந்திர துரோண மலையில் பக்தர்களை ஈர்க்கும் கங்கை கிணறு
சிக்கமகளூரு சந்திர துரோண மலையில் பக்தர்களை ஈர்க்கும் கங்கை கிணறு
சிக்கமகளூரு சந்திர துரோண மலையில் பக்தர்களை ஈர்க்கும் கங்கை கிணறு
ADDED : ஜூலை 23, 2024 05:56 AM

சிக்கமகளூரின் சந்திர துரோண மலை, இயற்கை எழில் நிறைந்த திருத்தலமாகும். இங்குள்ள கங்கை கிணறு மிகவும் அபூர்வமானது. இத்தகைய கிணறு உள்ளது என்பதே, பலருக்கும் தெரியாது.
கர்நாடகாவில் பக்தி பரவசத்தை ஏற்படுத்தும் புண்ணிய தலங்கள் ஏராளம். அனைத்து மாவட்டங்களிலும் புராதன கோவில்கள், கல் மண்டபங்கள், மலைகள் உள்ளன.
சிக்கமகளூரிலும் சிருங்கேரி, ஹொரநாடு என பல்வேறு புண்ணிய தலங்கள் பக்தர்களை சுண்டி இழுக்கின்றன. சந்திர துரோண மலையும் இங்குள்ளது. இந்த மலை பல அதிசயங்கள், அற்புதங்களை தன்னுள்ளே மறைத்து வைத்துள்ளது.
சீதாளய்யன மலை
அழகான, இயற்கை எழில் தாலாட்டும் மலையாகும். சந்திர துரோண மலைத்தொடரில் சீதாளய்யன மலையும் ஒன்றாகும். மலையை பற்றி பலருக்கும் தெரியும்.
இங்குள்ள கங்கை கிணறு பற்றி தெரியாது. சீதாளய்யன மலையில் சீதாளப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது.
கோவிலில் உள்ள கங்கை கிணற்றில் ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பி இருக்கும். கோடைக் காலத்திலும் வற்றியதே இல்லை. இத்தகைய கிணற்றை பார்க்க வேண்டும் என்ற ஆவல், பக்தர்களுக்கு ஏற்படாமல் இருக்காது.
சீதாளப்ப சுவாமி கோவிலின் மூலஸ்தானத்தில் உற்பத்தியாகும் கங்கை, அங்கிருந்து 250 படிகள் கீழே சென்று, அங்குள்ள நந்தியின் வாயில் இருந்து கிணற்றை அடைகிறது. சீதாளப்ப சுவாமி கோவிலின் முன் பகுதியில் இருந்து, வலது புறம் திரும்பினால், கங்கை கிணறுக்கு செல்லும் வழி தென்படும். சிறிது துாரம் வரை சிமென்ட் படிகள் உள்ளன. அவற்றில் இறங்கிச் சென்றால் கற்படிகள் இருக்கும்.
அடர்ந்த காடு
சுற்றிலும் அடர்ந்த காடு இருப்பதால், மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். எங்கோ பிறப்பெடுக்கும் கங்கை, வேறங்கோ பாய்வது இங்குள்ள சிறப்பாகும்.
சீதாளப்ப சுவாமியை தரிசித்து, இயற்கை அழகை ரசித்தபடி படிகளில் இறங்கி, அபூர்வமான கங்கை கிணற்றை பார்த்துவிட்டு சிறிது நேரம் பொழுதுபோக்கி, மன நிறைவுடன் திரும்பலாம்.
- நமது நிருபர் -