68 அடி உயரம்; 35,000 கிலோ எடையில் ராம்நகர் சாமுண்டீஸ்வரி அம்பாள் சிலை
68 அடி உயரம்; 35,000 கிலோ எடையில் ராம்நகர் சாமுண்டீஸ்வரி அம்பாள் சிலை
68 அடி உயரம்; 35,000 கிலோ எடையில் ராம்நகர் சாமுண்டீஸ்வரி அம்பாள் சிலை
ADDED : ஜூலை 23, 2024 05:55 AM

பெங்களூரை ஒட்டியுள்ளது ராம்நகர் மாவட்டம். இங்குள்ள ராமதேவர மலை புண்ணிய தலமாக விளங்குகிறது. அதே போன்று சாமுண்டீஸ்வரியும், இங்கு குடிகொண்டு அருள்பாலிக்கிறார்.
சாமுண்டீஸ்வரி பெயரைக் கேட்டால், மைசூரின் சாமுண்டி மலையில் குடிகொண்டுள்ள சாமுண்டீஸ்வரி தேவி நினைவுக்கு வருவார். கர்நாடகாவின் காவல் தெய்வமாக விளங்கும் சாமுண்டீஸ்வரிக்கு, மைசூரில் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் கோவில்கள் உள்ளன. அதேபோன்று ராம்நகரிலும் கோவில் அமைந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ராம்நகர், சென்னப்பட்டணாவின், மாலுார் பேரூராட்சியின், கவுடகெரே கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோவில் அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தங்கள் கஷ்டங்களை அம்பாளிடம் கூறி, பிரார்த்தனை செய்கின்றனர்.
இங்குள்ள சிலை மிகவும் பெரியது. சாமுண்டீஸ்வரி சிலை 35,000 கிலோ எடை கொண்டதாகும். 68 அடி உயரம் கொண்டது.தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளையால் தயாரிக்கப்பட்டுள்ளது. 18 கைகள் கொண்டுள்ள இந்த அம்பாள் சிலை, சாந்த சொரூபினியாக செதுக்கப்பட்டுள்ளது.
இதை கண்களால் பார்ப்பதே பாக்கியம் என்பது, மக்களின் நம்பிக்கை.வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கும் பக்தர்கள், ராம்நகரின் சாமுண்டீஸ்வரியை தரிசித்து பிரார்த்தனை செய்கின்றனர். அம்பாளை தரிசித்து, ஏழு வாரங்கள் தேங்காய் கட்டினால், நினைத்தது நடக்கும், கஷ்டங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
அது மட்டுமின்றி, இங்குள்ள நந்தி சிலையின் கீழே அமர்ந்து, தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டால், நோய்கள் குணமாகும். சாமுண்டீஸ்வரி கோவிலில், தினமும் அன்னதானம் நடக்கிறது.
- நமது நிருபர் -