அதிகாரிகளை திட்டி தீர்த்த முதல்வர் சித்தராமையா
அதிகாரிகளை திட்டி தீர்த்த முதல்வர் சித்தராமையா
அதிகாரிகளை திட்டி தீர்த்த முதல்வர் சித்தராமையா
ADDED : ஜூன் 20, 2024 05:40 AM
பெங்களூரு: விளையாட்டு, பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் சித்தராமையா, சரியாக பணியாற்றாத அதிகாரிகளை திட்டி தீர்த்தார்.
கர்நாடக விளையாட்டு, பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி மேம்பாட்டு ஆணைய கண்காணிப்பாளர் சந்திரசேகர் தற்கொலை வழக்கில், நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
நடவடிக்கை
இதனால் விளையாட்டு, பழங்குடியினர் நல துறை, தற்போது முதல்வர் சித்தராமையாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில், நேற்று இத்துறையின் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, 'விளையாட்டு, பழங்குடியின நல துறையில் எந்த வளர்ச்சியும் இல்லை. விளையாட்டு மைதானங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என புகார்கள் வருகிறது. பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட விடுதிகளில் மாணவர்களுக்கு சரியாக வசதிகள் இல்லை.
'இங்கு தங்கி படிக்கும் மாணவர்கள் தேர்வில் சரியாக மதிப்பெண்களும் எடுப்பதில்லை. அதிகாரிகளான நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். சரியாக வேலை செய்யவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 நாள் பயணம்
முதல்வர் சித்தராமையா இன்றும், நாளையும் பல்லாரி, விஜயநகரா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். இரண்டு மாவட்டங்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்.
இது குறித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் சித்தராமையா, இன்று மாலை 4:00 மணிக்கு சிறப்பு விமானம் மூலம், பெங்களூரின், ஹெச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார். 4:50 மணிக்கு, பல்லாரி, தோரணகல்லின், ஜிந்தால் விமான நிலையத்தில் இறங்குவார்.
தோரணகல்லின், வித்யாநகரில், ஜெ.எஸ்.டபிள்.யூ., டவுன்ஷிப்பில், மாலை 6:30 மணிக்கு நடக்கும் 'யோகரத்னா' விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பார். இரவு ஜிந்தாலில் தங்குவார்.
ஜூன் 21ல், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு ஜெ.எஸ்.டபிள்யூ., டவுன்ஷிப்பில் நடக்கும் யோகா நிகழ்ச்சியை துவங்கி வைப்பார்.
காலை 10:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, 10:25 மணிக்கு விஜயநகராவின், ஹொஸ்பேட்டுக்கு வருவார்.
காலை 11:00 மணிக்கு, ஹொஸ்பேட் கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவார்.
மாலை 4:00 மணிக்கு, ஹொஸ்பேட்டில் இருந்து புறப்பட்டு, 4:25 மணிக்கு ஜிந்தால் விமான நிலையத்துக்கு வருகிறார். 4:30 மணிக்கு சிறப்பு விமானத்தில் பெங்களூரு புறப்படுவார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.