ஜாமின் வழங்காத விசாரணை: நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை
ஜாமின் வழங்காத விசாரணை: நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை
ஜாமின் வழங்காத விசாரணை: நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை
ADDED : ஜூலை 28, 2024 11:36 PM

பெங்களூரு,: “சில முக்கியமான வழக்குகளில் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் ஜாமின் வழங்காமல் பாதுகாப்புடன் செயல்பட விரும்புகின்றனர்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
ஒப்பீட்டு சமத்துவம் மற்றும் பாகுபாடு எதிர்ப்பு பற்றிய பெர்க்லி மையத்தின் 11வது ஆண்டு மாநாடு கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு அளித்த பதில்:
நிவாரணம் கேட்டு வரும் நபர்களுக்கு உரிய தீர்வுகளை விசாரணை நீதிமன்றங்கள் வழங்க வேண்டும். இதை பலமுறை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில முக்கியமான வழக்குகளில் ஜாமின் கோரி வரும் மனுக்களை விசாரிக்கும் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள், ஜாமின் அளிக்காமல் மிக பாதுகாப்புடன் அந்த வழக்கை அணுக முயற்சிக்கின்றனர்.
இதனால், மனுதாரர் உயர் நீதிமன்றங்களை அணுக நேர்கிறது. உயர் நீதிமன்றமும் ஜாமின் அளிக்காததால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
இது சரியான அணுகுமுறை கிடையாது. ஒவ்வொரு வழக்கின் உண்மை தன்மையையும் பார்க்க விரிவான பொது அறிவு தேவை.
நீதிபதிகள் தங்கள் அறிவை பயன்படுத்தி அந்த வழக்குகளை அணுக வேண்டும். அப்படி அணுகினால் பெரும்பாலான வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை வராது.
இவ்வாறு அவர் கூறினார்.