'போராட்டங்களை தடுக்கவே பார்லி.,யில் சிலைகள் மாற்றம்': காங்கிரஸ் குற்றச்சாட்டு
'போராட்டங்களை தடுக்கவே பார்லி.,யில் சிலைகள் மாற்றம்': காங்கிரஸ் குற்றச்சாட்டு
'போராட்டங்களை தடுக்கவே பார்லி.,யில் சிலைகள் மாற்றம்': காங்கிரஸ் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 07, 2024 11:43 PM

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மஹாத்மா காந்தி சிலை முன் எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் போராடுவதை தடுத்து நிறுத்தவே, சிலைகளை மோடி அரசு அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றி யுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
பார்லிமென்ட் வளாகத்தின் முகப்பில் பிரமாண்ட காந்தி சிலை உள்ளது. எதிர்க்கட்சியினர் இந்த சிலையின் முன் நின்று போராட்டங்களை நடத்துவது வழக்கம்.
மேலும், பார்லி., வளாகத்துக்குள் அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி, ஜோதிபா புலே உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளும் இடம் பெற்றுள்ளன.
பார்லி., வளாகத்தின் வெளிப்பகுதியில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக, இந்த சிலைகள் அனைத்தும் அங்கிருந்து வேறு இடத்துக்கு அகற்றப்பட்டுள்ளன.
பழைய பார்லிமென்ட் வளாகத்தின் 5ம் எண் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள புல்வெளியில் இந்த சிலைகள் நிறுவப்பட்டுஉள்ளன.
பார்வையாளர்கள் அனைத்து சிலைகளையும் ஒரே இடத்தில் கண்டு அத்தலைவர்கள் பற்றி அறிய வசதியாக இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக லோக்சபா செயலகம் விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியதாவது:
சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு லோக்சபா செயலகம் சொல்லும் காரணத்தில் உண்மை இல்லை.
எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் நடத்தும் போராட்டங்களை தடுத்து நிறுத்தவே, மோடி அரசு சிலைகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களால், நிலையற்ற மோடி அரசை வீழ்ச்சியில் இருந்து தடுத்துவிட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.