சரியான நேரத்தில் நாட்டிற்கு கிடைத்த சரியான தலைவர் போட்டி போட்டு புகழாரம் சூட்டிய சந்திரபாபு, நிதீஷ் குமார்
சரியான நேரத்தில் நாட்டிற்கு கிடைத்த சரியான தலைவர் போட்டி போட்டு புகழாரம் சூட்டிய சந்திரபாபு, நிதீஷ் குமார்
சரியான நேரத்தில் நாட்டிற்கு கிடைத்த சரியான தலைவர் போட்டி போட்டு புகழாரம் சூட்டிய சந்திரபாபு, நிதீஷ் குமார்
ADDED : ஜூன் 07, 2024 11:56 PM

தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் போட்டி போட்டு புகழ்ந்து தள்ளியதால், பா.ஜ., - எம்.பி.,க்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று 'சம்விதான் சதன்' என்றழைக்கப்படும் பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மைய மண்டபத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களின் கூட்டம் நடந்தது.
இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பார்லிமென்ட் தலைவராகவும், பா.ஜ., லோக்சபா தலைவராகவும், லோக்சபாவின் சபை தலைவராகவும் பிரதமர் மோடி முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பதவிகளுக்கு, நரேந்திர மோடியின் பெயர் முன்மொழியப்பட்டதும், அதை, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பா.ஜ., தலைவர் நட்டா, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஆதரித்து பேசினர்.
சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி மூன்று மாதங்களாகவே ஓய்வு எடுக்கவில்லை. இரவு, பகலாக அவர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டதை பார்த்தேன்.
முன்னேற்றம்
என்ன மாதிரியான வீரியத்துடன் ஆரம்பித்தாரோ, அதே வீரியத்துடன் இறுதி வரையில் இருந்து பிரசாரத்தை முடித்தார். ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு, அவரது பிரசாரமே காரணம்.
சரியான நேரத்தில், சரியான தலைவர் இந்தியாவுக்கு கிடைத்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மோடியின் தலைமையில் உலகின் மூன்றாவது அல்லது இரண்டாவது பொருளாதார வல்லரசாக இந்தியா மாறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் பேசியதாவது:
எதிரணியில் உள்ள கட்சிகள் எவையுமே நம் நாட்டிற்கு எதையுமே செய்யவில்லை. இந்த நாடு, முன்னேற்றம் காண முடியும் என்றால், அது பிரதமர் மோடி தலைமையின் கீழ் மட்டுமே சாத்தியம். பிரதமர் நரேந்திர மோடியுடன் இனி எப்போதுமே எல்லா காலங்களிலும் இருக்கப் போகிறேன். இனி, மோடி தான் எல்லாம்.
பீஹாரில் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும். அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, உங்கள் தலைமையில் பணியாற்றப் போவது மிகவும் நல்ல விஷயமாக பார்க்கிறேன்.
நிர்வாக திறமை
இன்றைக்கே பிரதமராக பதவியேற்றுக் கொள்ளுங்கள் என்று தான் பிரதமரிடம் கூறினேன். நீங்கள் நாளைக்கு தான் பிரதமராக பதவியேற்கப் போவதாக கூறுகிறீர்கள்.
பரவாயில்லை. நீங்கள் எப்போது பதவியேற்றுக் கொண்டாலும், அப்போதெல்லாம் உங்களுடன் நான் இருப்பேன். உங்கள் தலைமையின் கீழ் இணைந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேசி முடித்ததும், பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த நிதீஷ் குமார், அவரது காலில் தொட்டு வணங்க முயன்றார். அப்போது பிரதமர் மோடி, அவரை தடுத்து நிறுத்தினார்.
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களின் தலைவரை தேர்வு செய்வதற்காக இத்தனை பேர் இங்கு அமர்ந்திருக்கிறோம். இந்த பதவிக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் தான் மிக மிக பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
தங்களை அறிந்தவன் என்ற முறையிலும், தங்கள் அமைச்சரவையின் ஒரு அங்கம் என்ற வகையிலும், எனக்கு உங்கள் திறமை பற்றி தெரியும். உங்களின் நிர்வாகத் திறமையை இந்தியா மட்டுமல்ல, உலகமே பாராட்டுகிறது.
முன்மொழிகிறோம்
பா.ஜ., தலைவர் நட்டா பேசுகையில், ''ஒடிசாவில் நாம் ஆட்சி அமைக்கப் போகிறோம். அதைவிட இனிப்பான செய்தி, ஆந்திராவில் அமையப்போகும் அரசு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக இருக்கப்போகிறது.
''அருணாச்சல பிரதேசத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளோம்.
''கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சியடைந்த இந்தியாவை அமைத்து, சாதித்துக் காட்டியுள்ளோம்,'' என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ''உங்கள் பெயரை பிரதமர் பதவிக்கு, ஏதோ இங்குள்ளவர்கள் மட்டும் முன்மொழிகிறோம் என எண்ணக்கூடாது.
''இந்த நாட்டின் 140 கோடி மக்களுமே உங்கள் பெயரை முன்மொழிகின்றனர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, நாட்டை திறம்பட வழி நடத்தி தர வேண்டு மென்று ஓங்கி குரல் ஒலிக்கிறது,'' என்றார்.
-- நமது டில்லி நிருபர் -