மீண்டும் வந்தார் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் அமோக வெற்றி
மீண்டும் வந்தார் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் அமோக வெற்றி
மீண்டும் வந்தார் சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் அமோக வெற்றி
UPDATED : ஜூன் 05, 2024 03:42 AM
ADDED : ஜூன் 05, 2024 03:39 AM

அமராவதி: ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, அமோக வெற்றியை பெற்றது. இதையடுத்து, சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராகிறார்.
ஆந்திராவில், 25 லோக்சபா தொகுதிகளுடன், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மிகவும் வலுவான முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்.,குக்கு எதிராக, பா.ஜ., தெலுங்கு தேசம் மற்றும் பிரபல நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
![]() |
லோக்சபா தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி, 21 இடங்களிலும், ஒய்.எஸ்.ஆர்.காங்., நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள, 175 இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 163 இடங்கள் கிடைத்தன. ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்., 12 இடங்களில் வென்றது.
கடந்த, 2019 தேர்தலில், ஒய்.எஸ்.ஆர்.காங்., 175 இடங்களில் அபார வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. மேலும், 22 லோக்சபா தொகுதிகளிலும் அந்த கட்சி வென்றது.
சட்டசபைக்கு, 2019ல் நடந்த தேர்தலில், 23 இடங்களில் வென்ற தெலுங்கு தேசம், தற்போது மிகப்பெரும் வெற்றியை பெற்றதன் வாயிலாக, சந்திரபாபு நாயுடு, நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக உள்ளார்.
![]() |
மாணவராக இருந்தபோதே அரசியலில் ஈடுபட்ட சந்திரபாபு, 74, காங்கிரசில் இணைந்தார். அதன்பின், தன் மாமனாரான, முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். என்.டி. ராமாராவ் மறைவுக்குப் பின், கட்சியின் தலைவரானார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவில், 1995 முதல் 2004 வரை தொடர்ந்து இரண்டு முறை முதல்வராக இருந்தார். தெலுங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்ட பின், 2014ல் மூன்றாவது முறையாக ஆந்திராவின் முதல்வரானார்.
முதல்வராக இருந்தபோது, ஹைதராபாதை, தொழில்நுட்ப நகரமாக மாற்றியதில் மிக முக்கிய பங்காற்றினார். கடந்த, 1990களில், மத்திய அரசுகள் அமைவதிலும் அவர் பங்காற்றினார். பிரதமர் வாஜ்பாய் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் ஆட்சி அமைந்தபோது, வெளியில் இருந்து ஆதரவு அளித்தார்.
கடந்த, 2014ல் முதல்வராக இருந்தபோது, ஆந்திராவுக்காக அமராவதியை மாநிலத்தின் தலைநகரமாக மாற்றுவதற்கு பல திட்டங்களை வகுத்தார். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியை இழந்ததால், அது நிறைவேறாமல் போனது.
மாநில திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, கடந்தாண்டு செப்., 9ல் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இரண்டு மாதங்களுக்கு மேல் சிறையில் இருந்த அவர், அக்., 31ல் தற்காலிக ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
அதன்பின், நவ., 20ல் ஜாமின் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பா.ஜ., மற்றும் ஜனசேனாவுடன் இணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியை மேற்கொண்டார். தன் அரசியல் வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ள சந்திரபாபு நாயுடு, தற்போது, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், முக்கிய கூட்டாளியாக உள்ளார்.
அவருடைய கட்சி, 16 லோக்சபா தொகுதிகளில் வென்றுள்ளது. சட்டசபை தேர்தலிலும், தனிப்பட்ட முறையில் தெலுங்கு தேசம், 134 இடங்களில் வென்றுள்ளது. இதன் வாயிலாக, தான் ஒரு கிங்மேக்கர் என்பதை, சந்திரபாபு நாயுடு மீண்டும் நிரூபித்துள்ளார்.