மைசூரில் முதல்முறை வெற்றி யதுவீருக்கு காத்திருக்கும் சவால்கள்
மைசூரில் முதல்முறை வெற்றி யதுவீருக்கு காத்திருக்கும் சவால்கள்
மைசூரில் முதல்முறை வெற்றி யதுவீருக்கு காத்திருக்கும் சவால்கள்
ADDED : ஜூன் 07, 2024 07:28 AM

மைசூரு: மைசூரு தொகுதியின் புதிய எம்.பி., யதுவீர் முன்பாக, சவால்கள் மலை போல குவிந்துள்ளன. இதை எதிர்கொள்ள அவர், அதிகம் உழைக்க வேண்டும்.
அரச குடும்பத்தின், யதுவீர் அரசியலுக்கு வந்துள்ளார். லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார். அரச குடும்பத்தை சேர்ந்த அவர், அரண்மனையில் இருந்து வெளியே வருவாரா, மக்களின் மத்தியில் வலம் வருவாரா என்ற கேள்விகளுக்கு இடையே, இவரை மக்கள் ஆதரித்து, எம்.பி.,யாக தேர்ந்தெடுத்தனர்.
தன்னை பா.ஜ., வேட்பாளராக அறிவித்த பின், பொது மக்களுடன் யதுவீர் கலந்து பழகினார். தொண்டர்கள், பிரமுகர்களுடன் சாலை ஓர கடையில் டீ குடித்து, சிறிய ஹோட்டல்களில் சிற்றுண்டி சாப்பிட்டும், நான் மக்களுடன் இருப்பேன் என்பதை உணர்த்தினார். ஆனால் இதற்கு பின், அவரது செயல்பாடு எப்படி இருக்கும் என்பதே முக்கியம்.
அரச குடும்பத்து பின்னணி, புதிய முகம், இளைஞராக இருப்பதால் யதுவீரின் மீது, மக்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். மைசூரு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, குடகு மாவட்டத்தையும் மேம்படுத்த வேண்டும் என்பது, மக்களின் விருப்பம்.
இரண்டு மாவட்டங்களின் மக்களுடன், நிரந்தர தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, மத்திய அரசிடம் மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவி பெற்று வருவது, கூட்டணி கட்சி சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றதால், பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்களை ஒருங்கிணைத்து, அழைத்து செல்வது, தொண்டர்களுக்கு எளிதில் கிடைப்பார் என்ற உணர்வு ஏற்படும்படி நடந்து கொள்ள வேண்டும்.
இயற்கை வளங்கள் கொட்டி கிடக்கும் மைசூரு, குடகு மாவட்டங்களில், சுற்றுலா வளர்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இரண்டு மாவட்டங்களும் வளர்ச்சி அடைந்தால், டிராவல் ஏஜென்சிகள், சிறு, சிறு வியாபாரிகள் உட்பட பலருக்கும் உதவியாக இருக்கும். இதை மனதில் கொண்டு, புதிய எம்.பி., யதுவீர் திட்டங் கள் வகுக்க வேண்டும்.
மைசூரு - குஷால்நகர் இடையே, நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்திருந்தார். கடந்தாண்டு மார்ச்சில், சட்டசபை தேர்தலுக்கு முன், மைசூரு நெடுஞ்சாலையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீரங்கபட்டணாவில் இருந்து, குஷால் நகர் வரை, நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், இன்னும் பணிகள் துவங்கவில்லை. 93 கி.மீ., தொலைவிலான சாலை அமைக்க, 4,130 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டது. திட்டமிட்டபடி நடந்திருந்தால், 2024 டிசம்பர் இறுதியில் முடிந்திருக்கும். ஆனால் இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணியே முடியவில்லை. இந்த பணிகளை புதிய எம்.பி., முடுக்கி விட வேண்டும்.
பல கோடி ரூபாய் செலவி லான, விரிவான பவர் லுாம் கிளஸ்டர் மேம்பாட்டு திட்டம், கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு, 2017ல் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி பணிகள் நடக்கவில்லை. இப்பணிகளை முடிக்க வேண்டிய சவாலும், புதிய எம்.பி.,க்கு உள்ளது.