பெண்ணிடம் நேருக்கு நேர் விசாரணை? பிரஜ்வலுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு!
பெண்ணிடம் நேருக்கு நேர் விசாரணை? பிரஜ்வலுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு!
பெண்ணிடம் நேருக்கு நேர் விசாரணை? பிரஜ்வலுக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு!
ADDED : ஜூன் 07, 2024 07:27 AM

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணாவின், போலீஸ் காவலை மேலும் நான்கு நாட்கள் நீட்டித்து, பெங்களூரு 42 வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஹாசன் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. பாலியல் வழக்கில் கடந்த 31ம் தேதி அதிகாலை 1:20 மணிக்கு, பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரை பெங்களூரு 42 வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் வைத்து, பிரஜ்வலிடம் விசாரணை நடத்தப்பட்டது. பெரும்பாலான கேள்விகளுக்கு, 'எனக்கு தெரியாது' என்று பதில் அளித்தார்.
ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சொல்லப்படும் மொபைல் போன், கடந்த ஆண்டே திருட்டு போனதாகவும், விசாரணை அதிகாரிகளிடம், பிரஜ்வல் கூறினார். நேற்று முன்தினம் அவருக்கு ஆண்மை பரிசோதனையும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்றுடன் அவரது போலீஸ் காவல் நிறைவு பெற்றது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நேற்று நடந்த விசாரணை:
அரசு வக்கீல் அசோக்: விசாரணை அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு, பிரஜ்வல் சரியாக பதில் சொல்வது இல்லை. வீடியோக்களில் இருப்பது நான் இல்லை என்றும், தவறு செய்யவில்லை என்றும் திரும்ப, திரும்ப கூறுகிறார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, மொபைல் போனில் ஆதாரங்கள் இல்லை.
ஆபாச வீடியோக்கள் இருந்ததாக சொல்லப்படும், மொபைல் போன் திருடப்பட்டதாக கூறுகிறார். வெளிநாட்டில் இருந்த போது, அவருக்கு சிலர் பண உதவி செய்து உள்ளனர்.
இதுபற்றி விசாரிக்க வேண்டி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணையும், பிரஜ்வலையும் நேருக்கு நேர் அமர வைத்தும் விசாரணை நடத்த வேண்டும். இதனால் அவரை மீண்டும், போலீஸ் காவலுக்கு அனுப்ப வேண்டும்.
பிரஜ்வல் வக்கீல் டாமி செபாஸ்டின்: பிரஜ்வல் ஏழு நாட்கள், போலீஸ் காவலில் இருந்தார். அவரிடம் விசாரிக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன.
அப்போது விட்டுவிட்டு இப்போது வந்து, காவலை நீட்டிக்க வேண்டும் என்று கேட்பது சரியல்ல. அவரை மேலும் போலீஸ் காவலில் வைக்கும், அவசியம் ஏற்படவில்லை. நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவகுமார், அரசு வக்கீலின் வாதத்தை ஏற்று, வரும் 10ம் தேதி வரை நான்கு நாட்கள், பிரஜ்வலின் போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.