சி.பி.ஐ., விசாரிக்க அனுமதி தேவை: ம.பி., அரசு அதிரடி
சி.பி.ஐ., விசாரிக்க அனுமதி தேவை: ம.பி., அரசு அதிரடி
சி.பி.ஐ., விசாரிக்க அனுமதி தேவை: ம.பி., அரசு அதிரடி
ADDED : ஜூலை 19, 2024 01:25 AM
போபால்: சி.பி.ஐ., விசாரணையை துவங்குவதற்கு முன், மாநில அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற வேண்டியது அவசியம் என, மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிநபர்கள், அரசு அதிகாரிகளிடம் சி.பி.ஐ., விசாரணையை துவங்குவதற்கு முன், மாநில அரசின் அனுமதியை எழுத்துப்பூர்வமாக பெறவேண்டும் என, மத்திய பிரதேச அரசு நேற்று அறிவித்தது.
இந்த உத்தரவு, ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, பா.ஜ., அரசு ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தான் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன.
பா.ஜ., ஆட்சியில் உள்ள மாநிலங்களில் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்தது இல்லை. இந்நிலையில், பா.ஜ., ஆட்சி நடக்கும் ம.பி.,யிலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்கள் மீது சி.பி.ஐ., விசாரணையை மத்திய அரசு ஏவி விடுவதாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, சி.பி.ஐ., தனி அதிகாரம் படைத்த அமைப்பு என்றும், அதை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்து இருந்தது.