இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் மோடியை சந்தித்த கனடா பிரதமர் உறுதி
இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் மோடியை சந்தித்த கனடா பிரதமர் உறுதி
இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் மோடியை சந்தித்த கனடா பிரதமர் உறுதி
ADDED : ஜூன் 16, 2024 11:33 PM

புதுடில்லி: காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முக்கியமான விவகாரத்தில் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என்று ஜஸ்டின் ட்ரூடோ, அந் நாட்டு பார்லிமென்டில் தெரிவித்தார்.
இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.
கடந்தாண்டு இறுதியில், 'ஜி - 20' கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்தியா இந்த விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை கடுமையாக தெரிவித்தது.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு கனடா பாதுகாப்பு தருவதும், அடைக்கலம் தருவதுமே பிரச்னைகளுக்கு முக்கிய காரணம் என, மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், இத்தாலியில் 'ஜி - 7' மாநாடு சமீபத்தில் நடந்தது. அந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு தொடர்பாக, ஜஸ்டின் ட்ரூடோ நேற்று முன்தினம் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடியுடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது. பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளோம். மிகவும் முக்கியமான விஷயத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட உறுதியேற்றுள்ளோம். அது தொடர்பான நடவடிக்கைகள் துவங்க உள்ளோம். இது குறித்து இதற்கு மேல் தெரிவிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.