பஸ் ஓட்டுனரின் அலட்சியம்: 26 பேர் படுகாயம்
பஸ் ஓட்டுனரின் அலட்சியம்: 26 பேர் படுகாயம்
பஸ் ஓட்டுனரின் அலட்சியம்: 26 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 03, 2024 04:19 AM

சாம்ராஜ்நகர் : பிலிகிரிரங்கநாத மலையில் ரங்கநாத சுவாமியை தரிசித்து விட்டு வரும் போது, பஸ் ஓட்டுனரின் அலட்சியத்தால், மலையில் இருந்து பஸ் கவிழ்ந்ததில், 26 பயணியர் படுகாயம் அடைந்தனர்.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூட்டின் பாகூர், மதனஹள்ளி, ஹரல்வாடி, தகடூர் கெப்பேபுர், அகினவலு கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர், மே 31ம் தேதி சாம்ராஜ்நகர் பிலிகிரி ரங்கநாத மலையில் உள்ள ரங்கநாத சுவாமியை தரிசிக்க, தனியார் பஸ்சில் வந்திருந்தனர்.
மறுநாள் (நேற்று முன்தினம்) தரிசனம் முடித்துவிட்டு, கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமர்ந்து உணவு சாப்பிட புறப்பட்டனர்.
அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து, மலையில் இருந்து பள்ளத்தை நோக்கி பாய்ந்தது. பெரிய மரங்கள் இருந்ததால், அதனிடையில் சிக்கி, மேற்கொண்டு பள்ளத்தில் விழாமல், நின்றது.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர். இது தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், படுகாயம் அடைந்தவர்களை, மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.
அகினவலு கிராமத்தை சேர்ந்த மஹாதேவம்மா கூறியதாவது:
சுவாமி தரிசனம் முடிந்து திரும்பும் போது, தன் நண்பரிடம் பஸ்சை ஓட்டுமாறு ஓட்டுனர் கூறியுள்ளார். அவரும் பஸ்சை ஓட்டினார். வளைவின் போது, எதிரே ஒரு கார் வந்ததால், தடுமாறினார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பள்ளத்தில் கவிழ்ந்தது. மரங்கள் இருந்ததால் பெரிய அபாயம் தவிர்க்கப்பட்டது. கீழே விழுந்திருந்தால், உயிர் பலி ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
� கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பஸ். இடம்: சாம்ராஜ்நகர்.