அடுத்தடுத்த மாநிலங்களில் அண்ணன் - தங்கை தோல்வி
அடுத்தடுத்த மாநிலங்களில் அண்ணன் - தங்கை தோல்வி
அடுத்தடுத்த மாநிலங்களில் அண்ணன் - தங்கை தோல்வி
ADDED : ஜூன் 07, 2024 07:19 AM

பல்லாரி: பல்லாரி எம்.பி.,யாக இருந்த ஸ்ரீராமுலுவும், அவரது தங்கை சாந்தாவும், லோக்சபா தேர்தலில் தோற்று விட்டனர்.
கர்நாடகாவில் உள்ள பல்லாரி லோக்சபா தொகுதி, தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத தொகுதியாக விளங்குகிறது. இந்த தொகுதி தான், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு, அரசியல் வாழ்வு கொடுத்தது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த பல்லாரியில், 2004ல் முதல்முறை பா.ஜ., வெற்றி பெற்றது.
அதன்பின்னர் 2009, 2014, 2019 தேர்தல்களில் பா.ஜ., தொடர்ந்து வெற்றி பெற்றது. ஆனால் நடந்த முடிந்த தேர்தலில், பல்லாரியை, பா.ஜ., கோட்டை விட்டு உள்ளது.
பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மாநில அமைச்சருமான ஸ்ரீராமுலு 98,992 ஓட்டுகள் வித்தியாசத்தில், காங்கிரசின் துக்காராமிடம் வெற்றியை பறிகொடுத்து உள்ளார். இத்தனைக்கும் ஸ்ரீராமுலு ஒரு முறை, பல்லாரி எம்.பி.,யாக இருந்தவர்.
ஸ்ரீராமுலுவின் தங்கை சாந்தா. இவரும் 2009 - 2014 வரை, பல்லாரி பா.ஜ., - எம்.பி.,யாக இருந்தவர். சாந்தாவின் கணவர் ஆந்திராவின் ஹிந்துப்பூரை சேர்ந்தவர். இதனால் கர்நாடக அரசியலை துறந்துவிட்டு, ஆந்திர அரசியலில் சாந்தா அடியெடுத்து வைத்தார்.
லோக்சபா தேர்தலில் ஹிந்துப்பூர் தொகுதியில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அவரும் 1,32,427 ஓட்டுகள் வித்தியாசத்தில், தெலுங்கு தேசம் கட்சியின் பார்த்தசாரதியிடம் தோல்வி அடைந்து உள்ளார். இதனால் ஸ்ரீராமுலு, சாந்தாவின் ஆதரவாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.