ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி
ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி
ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி
ADDED : ஜூன் 05, 2024 03:06 AM

பெங்களூரு:மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, 92. இவரது சொந்த ஊர், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ஹரதனஹள்ளி கிராமம். கடந்த 1991 லோக்சபா தேர்தலில், ஹாசனில் இருந்து முதல் முறையாக, தேவகவுடா வெற்றி பெற்றார். அதன்பின், 1998ல் நடந்த தேர்தலிலும் வென்றார்.
ஆனால், 1999ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட புட்டசாமி கவுடாவிடம் தோல்வி அடைந்தார். இது, அவருக்கு அதிர்ச்சி தோல்வியாகவே இருந்தது. அதன்பின், 2004, 2009, 2014ல் ஹாட்ரிக் வெற்றி பெற்று, தேவகவுடா பதிலடி கொடுத்தார்.
ஹாசன் தொகுதியானது, தேவகவுடா குடும்பத்தின் கோட்டையாகவே இருந்தது. 2019ல் ஹாசனில் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றார். நடந்து முடிந்த தேர்தலிலும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக பிரஜ்வல் மீண்டும் களம் இறக்கப்பட்டார்.
காங்கிரஸ் வேட்பாளராக, புட்டசாமி கவுடாவின் பேரன், ஸ்ரேயஷ் படேல் போட்டியிட்டார். தேவகவுடாவை புட்டசாமி கவுடா தோற்கடித்தது போன்று, பிரஜ்வலை ஸ்ரேயஷ் படேல் தோற்கடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 26ல், ஹாசனில் லோக்சபா தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்த இரண்டு நாட்களுக்கு பின், பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆயினும், நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில், பிரஜ்வலை தோற்கடித்து ஸ்ரேயஷ் படேல் வெற்றி பெற்று உள்ளார்.
ஆபாச வீடியோ வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் இருக்கும் பிரஜ்வல், இத்தகவலை கேள்விப்பட்டு சோகத்தில் ஆழ்ந்தார்.