Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் 1.36 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் காங்அபார வெற்றி: என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணிக்கு அதிர்ச்சி தோல்வி

புதுச்சேரியில் 1.36 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் காங்அபார வெற்றி: என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணிக்கு அதிர்ச்சி தோல்வி

புதுச்சேரியில் 1.36 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் காங்அபார வெற்றி: என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணிக்கு அதிர்ச்சி தோல்வி

புதுச்சேரியில் 1.36 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் காங்அபார வெற்றி: என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணிக்கு அதிர்ச்சி தோல்வி

ADDED : ஜூன் 05, 2024 03:07 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களில் காலை முதல் நள்ளிரவு வரை விறுவிறுப்பாக நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பா.ஜ., வேட்பாளரை காட்டிலும் 1,36,516 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், தேசிய ஜனநாய கூட்டணி கட்சி சார்பில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனா உள்பட 26 பேர் போட்டியிட்டனர். ஏப்ரல் 19ம் தேதி ஓட்டு பதிவு நடந்தது.

இந்த மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் நான்கு பிராந்தியங்களிலும் ஸ்டிராங் ரூமில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

புதுச்சேரி பிராந்தியத்தில் 23 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் லாஸ்பேட்டை அரசு மகளிர் பொறியியல் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் ஆகிய 2 இடங்களில் நடந்தது.

காரைக்காலில் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லுாரியிலும், மாகியில் ஜவகர்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஏனாம் எஸ்.ஆர்.கே.,கலை அறிவியல் கல்லுாரியிலும் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் - பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் இடையே தான் நேரடி போட்டி நிலவியது. இருவருக்கு மாறி மாறி ஓட்டுகள் பதிவாகி இருந்தது.

மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ண துவங்கியது முதல் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் தொடர்ந்து முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றிலும் காங்., வேட்பாளரின் முன்னிலை அதிகரித்த வண்ணம் இருந்தது.

முதல் சுற்றில் புதுச்சேரியில் மண்ணாடிப் பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜ் நகர், முத்தி யால்பேட்டை, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், ஏம்பலம், நெடுங்காடு, காரைக்கால் வடக்கு மற்றும் மாகி, ஏனாம் என 12 தொகுதி ஓட்டுகள் எண்ணப்பட்டன.

இதில் ஏனாமினை தவிர்த்து மற்ற தொகுதிகள் அனைத்தும் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னணியில் இருந்தார்.

இரண்டாம் சுற்றில், திருபு வனை, வில்லியனூர், இந்திராநகர், ராஜ்பவன், லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு, மணவெளி, நெட்டப்பாக்கம், திருநள்ளாறு, காரைக்கால் தெற்கு ஆகிய 10 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த சுற்றிலும் இந்திரா நகரை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்.,வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை பெற்றார்.

மூன்றாம் சுற்றில் ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, காலாப்பட்டு, உப்பளம், முதலியார் பேட்டை, பாகூர், நிரவி ஆகிய 8 தொகுதிகளின் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இந்த சுற்றிலும் காங்., கட்சி முன்னிலை பெற, ஓட்டு வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இறுதியில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் 4,26,005 ஓட்டு களுடன் முதலிடம், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் 2,89,489 ஓட்டுகளுடன் இரண்டாம் இடம் பெற்றனர்.

பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை காட்டிலும் 1,36,516 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங் வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெற்றார். அடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 39,603 ஓட்டுகளுடன் மூன்றாம் இடம், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன் 25,165 ஓட்டுகளுடன் நான்காம் இடம் பிடித்தனர். 9763 ஓட்டுகளுடன் நோட்டோ ஐந்தாம் இடத்தை பிடித்தது.

12-வது முறையாககாங்., சாதனை


புதுச்சேரி லோக்சபா தொகுதியில் இதுவரை 15 லோக்சபா தேர்தலும், 1 இடைத்தேர்தலும் நடந்துள்ளது. இவற்றில் 11 முறை காங்., கட்சியே வெற்றிப் பெற்றுள்ளது.

கடந்த 1963ல் சிவபிரகாசம், 1967ல் சேதுராமன், 1971ல் மோகனகுமாரமங்கலம், 1980, 1984, 1989 ஆண்டுகளில் சண்முகம், 1991, 1996, 1999 ஆகிய ஆண்டுகளில் பாரூக், 2009ல் நாராயணசாமி, 2019 இல் வைத்திலிங்கம் வெற்றிப் பெற்றுள்ளனர். இப்போது சிட்டிங் எம்.பி.,யாக உள்ள காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் 12-வது முறையாக மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.

சான்றிதழ் வழங்கல்


ஓட்டு எண்ணிக்கை 8.30 மணிக்கு முடிந்தும் கூட உடனடியாக வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கவில்லை. ஓட்டு எண்ணிக்கை படிவம் 21-இ குறிப்பிடப்படுதில் கால காலதாமம் ஏற்பட்டது. ஒருவழியாக ஓட்டு எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு தொடர்ந்து இரவு 10.41 மணியளவில் புதுச்சேரி லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் சான்றிதழை வழங்கினார். முன்னாள் முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சி தலைவர் சிவா உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள்,கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உடனிருக்க பெற்றுக்கொண்டார்.

கொண்டாடட்டம்


தொடர்ந்து புதுச்சேரி முக்கிய சாலைகள் வழியாக வெற்றி பேரணியாக காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு, காங்., கட்சி மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் பூக்களை துாவியும், மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். காங்., கட்சி அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us