5வது நாளாக பா.ஜ.,வினர் தர்ணா, வெளிநடப்பு வால்மீகி முறைகேடு
5வது நாளாக பா.ஜ.,வினர் தர்ணா, வெளிநடப்பு வால்மீகி முறைகேடு
5வது நாளாக பா.ஜ.,வினர் தர்ணா, வெளிநடப்பு வால்மீகி முறைகேடு
ADDED : ஜூலை 23, 2024 06:15 AM

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, முதல்வர் சித்தராமையா ராஜினாமா வலியுறுத்தி, 5வது நாளாக சட்டசபையில் எதிர்க்கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று, நிதித்துறையை நிர்வகிக்கும், முதல்வர் சித்தராமையா தன் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, கடந்த வாரம் நான்கு நாட்கள், சட்டசபையில் எதிர்க்கட்சியினர் தர்ணா நடத்தினர்.
ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ், பா.ஜ., உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு, அரசு தரப்பில் முதல்வர் சித்தராமையா, கடந்த வாரமே பதில் அளித்தார்.
ஆனாலும், நேற்று காலையில் சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், மீண்டும் எதிர்க்கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். 'முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்யும் வரை போராட்டம் நடத்துவோம்' என கோஷம் எழுப்பினர்.
அப்போது நடந்த விவாதம்:
சபாநாயகர் காதர்: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு தொடர்பாக, ஏற்கனவே நீங்கள் பேசினீர்கள்.
முதல்வர் சித்தராமையாவும் பதில் அளித்துள்ளார். பல உறுப்பினர்கள், தங்கள் தொகுதி பிரச்னைகள் குறித்து பேச வேண்டி உள்ளது. எனவே தர்ணாவை விட்டு விட்டு, கூட்டம் நடத்த ஒத்துழைப்புத் தாருங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக்: அரசின் பதில் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. முறைகேடுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சட்டசபைக்கு வெளியேயும், உள்ளேயும் போராட்டம் நடத்தினோம். ஆனாலும், முதல்வரின் பதில் உரையில், முறைகேடு தொடர்பாக ஒரு வார்த்தையும் பேசாமல், மற்ற விஷயங்களையே பேசினார்.
எங்கள் ஆட்சிக் காலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். அதற்காக தான், மக்கள் எங்களை இந்த இடத்தில் அமர வைத்துள்ளனர். வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேட்டில் முதல்வருக்கு தொடர்பு உள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் நாகேந்திரா ராஜினாமா செய்ததன் மூலம், முதல் விக்கெட் விழுந்துள்ளது.
முதல்வர் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ஆனாலும், சபாநாயகரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து, சட்டசபையில் தர்ணாவை திரும்ப பெறுகிறோம்.
சபாநாயகர்: மிக்க நன்றி. தயவு செய்து அனைவரும் அவரவர் இருக்கையில் அமருங்கள். கேள்வி நேரத்தை துவங்கலாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
பின், பா.ஜ., - ம.ஜ.த., ஆகிய எதிர்க்கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த வேளையில், 'எங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தைரியம் இல்லாமல், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறீர்களா?' என, காங்கிரஸ் உறுப்பினர் நயனா மோட்டம்மா உரத்த குரலில் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்டு கட்சியின் மற்ற உறுப்பினர்கள் சிரித்தனர்.