கெஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பிய பா.ஜ.,
கெஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பிய பா.ஜ.,
கெஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பிய பா.ஜ.,
ADDED : ஜூன் 02, 2024 01:36 AM

புதுடில்லி : மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரியுள்ள நிலையில், அவருடைய வீட்டுக்கு, பா.ஜ., மூத்த தலைவர் விஜய் கோயல், ஆம்புலன்ஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதன்படி, இன்று அவர் சிறையில் மீண்டும் ஆஜராக வேண்டும்.
இதற்கிடையே, தனக்கு பல உடல் உபாதைகள் இருப்பதாகவும், அதற்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கு வசதியாகவும், மேலும் ஒரு வாரம் இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் கோயல் நேற்று காலை கெஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பியுள்ளார்; அவரும் உடன் சென்றார். ஆனால், போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.
இது குறித்து விஜய் கோயல் கூறியுள்ளதாவது:
'எடை குறைந்து விட்டது. உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டியது அவசியம்' என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆனால், 21 நாட்களாக அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
அனுதாபத்தை பெறுவதற்கான இந்த நாடகத்தை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் விரும்பும் மருத்துவமனையில், அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் செய்வதற்கு வசதியாக இந்த ஆம்புலன்சை அனுப்பியுள்ளோம்.
நேர்மையானவராக இருந்தால், மருத்துவப் பரிசோதனைக்கு அவர் வரட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.