தேர்தல் சவாலில் தோற்றதால் பா.ஜ., அமைச்சர் ராஜினாமா
தேர்தல் சவாலில் தோற்றதால் பா.ஜ., அமைச்சர் ராஜினாமா
தேர்தல் சவாலில் தோற்றதால் பா.ஜ., அமைச்சர் ராஜினாமா
ADDED : ஜூலை 05, 2024 12:54 AM

ஜெய்ப்பூர்ராஜஸ்தானில் லோக்சபா தேர்தலின் போது சவால் விட்ட பா.ஜ., மூத்த தலைவர் கிரோடி லால் மீனா, சவாலில் தோற்றதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில வேளாண், ஊரக வளர்ச்சி, நோய் கட்டுப்பாடு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தவர் கிரோடி லால் மீனா, 72.
ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாகவும், ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தவர். கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, முதல்வருக்கான போட்டியிலும் இவர் பெயர் இடம் பெற்றது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில், 24 தொகுதிகளை பா.ஜ., கைப்பற்றியது. இந்த தேர்தலிலும் மாபெரும் வெற்றி வசப்படும் என பா.ஜ., தலைமை எதிர்பார்த்தது.
கிழக்கு ராஜஸ்தானில் உள்ள தவுசா, பரத்புர், கரவுலி தோல்புர், ஆல்வார், டோங் சவாய் மாதோபுர், கோட்டா பண்டி உள்ளிட்ட ஆறு தொகுதிகளுக்கு, கிரோடி லால் மீனா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
'இந்த ஆறு தொகுதிகளில் ஒன்றில் தோற்றாலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்' என, தேர்தலுக்கு முன் அவர் சவால் விட்டார்.
முடிவில் நான்கு தொகுதிகளை பா.ஜ., இழந்தது. மொத்தமுள்ள 25 தொகுதிகளில், 14 இடங்களில் மட்டுமே பா.ஜ., வெற்றி பெற்றது. தோல்விக்கு பொறுப்பேற்ற கிரோடி லால் மீனா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். 10 நாட்களுக்கு முன்னரே தன் ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறியதாவது:
அமைச்சர் பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்ததால், சமீபத்தில் நடந்த கேபினட் கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. தோல்விக்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளேன்; கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி உள்ளேன். ஆனால், என் ராஜினாமாவை ஏற்பது குறித்து முதல்வர் இன்னும் பதில் அளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.