தர்ஷனை காப்பாற்ற முடியாது பா.ஜ., 'மாஜி' அமைச்சர் கருத்து
தர்ஷனை காப்பாற்ற முடியாது பா.ஜ., 'மாஜி' அமைச்சர் கருத்து
தர்ஷனை காப்பாற்ற முடியாது பா.ஜ., 'மாஜி' அமைச்சர் கருத்து
ADDED : ஜூன் 18, 2024 06:35 AM

ஹாவேரி: ''ரேணுகாசாமி கொலை வழக்கில் இருந்து, யாரையும் காப்பாற்ற முடியாது,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார்.
ஹாவேரியில் அவர் நேற்று அளித்த பேட்டி:
நான் விவசாயத் துறை அமைச்சராக இருந்த போது, நடிகர் தர்ஷன் விவசாயத் துறை துாதராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் இத்தகைய செயலில் தொடர்பு கொள்ளவில்லை. பிரபலமான நடிகராக இருந்ததால், மாநில விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்த, இவரை துாதராக நியமித்தோம்.
சித்ரதுர்காவின், ரேணுகாசாமி கொலை நடந்திருப்பது துரதிஷ்டவசமாகும். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். கொலையானவரின் குடும்பத்தினருக்கு, நியாயம் கிடைக்க வேண்டும்.
இந்த மண்ணில் சட்டத்தை விட, யாரும் பெரியவர்கள் அல்ல. கொலையாளிகளுக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும். கொலை வழக்கில் தர்ஷன் மீதான குற்றச்சாட்டு உறுதியானால், அவருக்கு திரையுலகில் தடை விதிக்கப்படலாம்.
ரேணுகாசாமி கொலை வழக்கில், யாரையும் காப்பாற்ற முடியாது. நானும் கூட போலீஸ் அதிகாரியாக இருந்தவன். தர்ஷனை காப்பாற்ற, யார் தங்கள் செல்வாக்கை காண்பிக்கின்றனர் என்பது, எனக்கு தெரியவில்லை.
ஒரு கலைஞனாக தர்ஷனை எனக்கு தெரியும். ஆனால் அவரை பற்றி, முழுமையான விபரங்கள் தெரியாது. அவருடன் இருந்தவர்கள் யார் என்பதும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் உபேந்திரா
நடிகர் உபேந்திரா தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணையை கர்நாடகா மட்டுமின்றி, நாடு முழுதும் மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும். அதே நேரத்தில் ஆழமாக விசாரிக்க வேண்டும். ரேணுகாசாமி குடும்பத்தினர், மக்கள் மற்றும் தர்ஷன் ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஊகங்கள் உருவாகின்றன.
எந்த வழக்காக இருந்தாலும், அந்த வழக்கு விசாரணை பற்றிய வீடியோ ஆவணங்கள், சாட்சிகள் உட்பட, அனைத்து விபரங்களையும், அவ்வப்போது சம்பந்தப்பட்டோரின் குடும்பத்தினருடன், போலீசார் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்கு முன் போலீசார், விசாரணை விபரங்களை எழுத்து மூலமாக பதிவு செய்வர். இப்போது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்தையும் வீடியோவில் பதிவு செய்யலாம். இந்த ஆவணங்களை போலீசார், பகிரங்கப்படுத்த வேண்டும்.
இதுபோன்று செய்தால், சாட்சிகளை கலைப்பது, செல்வாக்கு மிக்கவர்களின் தலையீடு, ஊழல் போன்றவைகளுக்கு கடிவாளம் போடலாம். ரேணுகா குடும்பத்தினர், மக்கள், தர்ஷன் ரசிகர்கள், ஊடகத்தினருக்கு ஏற்பட்ட குழப்பம் நீங்கும். ஊடகங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.