குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும் முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., எச்சரிக்கை
குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும் முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., எச்சரிக்கை
குற்றச்சாட்டை வாபஸ் பெற வேண்டும் முதல்வருக்கு பா.ஜ., - எம்.பி., எச்சரிக்கை
ADDED : ஜூலை 21, 2024 07:31 AM

உடுப்பி: தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய, முதல்வர் சித்தராமையாவுக்கு பா.ஜ., - எம்.பி., கோட்டா சீனிவாச பூஜாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டசபையில் பேசிய முதல்வர் சித்தராமையா, 'கோட்டா சீனிவாஸ் பூஜாரி அமைச்சராக இருந்தபோது, விவசாயிகளுக்கு ஆழ்துளைக்கிணறு அமைக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது' என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவருக்கு பதிலடி கொடுத்து, உடுப்பியில் சீனிவாச பூஜாரி நேற்று அளித்த பேட்டி:
என் மீது சுமத்திய குற்றச்சாட்டை, முதல்வர் சித்தராமையா, இன்னும் ஒரு வாரத்தில் திரும்பப் பெற வேண்டும். இல்லை என்றால் விதான்சவுதா முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவேன்.
நான் தவறு செய்திருந்தால், சிறை தண்டனை கிடைக்க செய்யும் அதிகாரமும், சி.ஐ.டி.,யும் முதல்வரிடம் உள்ளது. ஓராண்டாக நீங்களே முதல்வராக இருக்கிறீர்கள். ஓராண்டாக நீங்கள் இது பற்றி பேசவில்லை.
நான் அமைச்சராக இருந்தபோது, நீங்களே எதிர்க்கட்சித் தலைவராக இருந்தீர்கள். அப்போதும் இது பற்றி வாய் திறக்கவில்லை. இப்போது வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வெளிச்சத்துக்கு வந்ததால், உங்கள் தவறை மூடி மறைக்க, மற்றவர் மீது குற்றஞ்சாட்டுகிறீர்கள்.
என் பெயர் குறிப்பிட்டதை வாபஸ் பெறுங்கள். இல்லையென்றால் இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்க வேண்டும்.
என் பதவிக் காலத்தில், நான் ஒரு ரூபாய் ஊழல் செய்திருப்பது உண்மை என்றால், அந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படையுங்கள்.
இல்லையென்றால் நானே சி.பி.ஐ., விசாரணைக்கு வலியுறுத்தி, விதான் சவுதா, விகாஸ் சவுதா இடையே உள்ள காந்தி சிலை முன் தர்ணா நடத்துவேன்.
எஸ்.சி., பிரிவினர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை, வேறு மாநிலங்களின் தேர்தலுக்கு செலவிட்டீர்கள். தேர்தலுக்கு மதுபானம் வாங்க செலவழித்ததன் மூலம், காங்கிரஸ் அரசு பெரிய அபச்சாரம் செய்துள்ளது.
தன் ஊழலை மறைக்க, என் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
முந்தைய அரசில் நடக்காத முறைகேடுகளை கூறுகிறீர்கள். என் பெயரையும் கூட முறைகேட்டில் இழுத்து வந்தீர்கள்.
நான் அமைச்சராக இருந்தபோது, டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்ததும், நான் உடனடியாக கோப்புகளை வரவழைத்து ஆய்வு செய்தேன். சி.ஐ.டி., விசாரணைக்கும் உத்தரவிட்டேன்.
விவசாயிகள் நேரடியாக ஆழ்துளைக்கிணறுகள் அமைக்க அனுமதி அளித்தேன். அவர்களின் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் நடைமுறையை கொண்டு வந்தேன். அந்த வசதியே இப்போதும் தொடர்கிறது.
கோட்டா சீனிவாச பூஜாரி, சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது, முறைகேடு நடக்கவில்லை என, அதிகாரிகள், அமைச்சர்கள், துணை முதல்வரே கூறியுள்ளனர்.
என் பதவிக் காலத்தில் ஒரு ரூபாய் முறைகேடும் நடக்கவில்லை என, தெளிவாக கூறியுள்ளனர்.
ஆனால் முதல்வர், என் மீது குற்றஞ்சாட்டுகிறார். இதற்கு விளக்கம் கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு அவர் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.