கேரளாவில் முதல் முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல்
கேரளாவில் முதல் முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல்
கேரளாவில் முதல் முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல்
ADDED : ஜூன் 15, 2024 01:51 AM
திருவனந்தபுரம்:கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவைக் காய்ச்சல். அடிக்கடி பறவைகளை தாக்கும் இந்நோயால் லட்சக்கணக்கான பறவைகள் அழிக்கப்படுகின்றன. இந்த காய்ச்சல் மனிதர்களை தாக்காது என்று கருதப்பட்ட நிலையில், ஏப்ரலில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 59 வயது நபர் பறவை காய்ச்சல் தாக்கி இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, கேரளாவில் பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆலப்புழா மாவட்டம், முகம்மா கிராமத்தில், சில நாட்களுக்கு முன் காகங்கள் மொத்தமாக இறந்து விழுந்தன. அந்த காகங்களின் உடல் மாதிரி எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள பறவை காய்ச்சல் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பப்பட்டது.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், இறந்த காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டதாக முகம்மா பஞ்சாயத்து தலைவர் சுவப்னா பாபு தெரிவித்துள்ளார். இது, புலம்பெயர்ந்த பறவைகளால் வருகிறதா அல்லது இங்கிருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் பறவைகளிலிருந்து பரவியதா என்பது பற்றிய தகவல் இல்லை. கால்நடைத்துறை அதிகாரிகள் தரும் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என, கேரள அரசு தெரிவித்துள்ளது.