காலையில் அப்படி!
நேற்று முன்தினம் விபத்து நடந்த அடுத்த சில மணி நேரங்களில், ரயில்வே வாரிய தலைவர் ஜெயா வர்மா சின்ஹா டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சரக்கு ரயிலின் டிரைவர், சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்தப்படும்,” என்றார்.
மாலையில் இப்படி!
நேற்று முன்தினம் மாலையில், ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிக்கையில், 'கஞ்சன்ஜங்கா ரயில் சென்ற வழித்தடத்தில், அதிகாலையில் இருந்தே சிக்னல்கள் செயல்படவில்லை. சிக்னல்கள் பழுதடையும் நேரத்தில், ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருந்து டி.ஏ.912 என்ற எழுத்துப்பூர்வ ஆவணம் ரயில் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆவணம் வழங்கப்பட்டால், குறிப்பிட்ட ரயில் சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தாலும் நிறுத்தாமல் பயணத்தை தொடரலாம் என்பது ரயில்வே விதி. அந்த ஆவணத்தை பெற்றுக் கொண்ட காரணத்தினாலேயே சரக்கு ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தாமல் சிக்னல்களை கடந்து சென்றார். ஆனால், அவர் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லாமல், அதிவேகத்தில் சென்றது தான் விபத்துக்கு காரணம்' என, தெரிவிக்கப்பட்டது.
லோகோ பைலட்டுகள் சொல்வது என்ன?
அகில இந்திய லோகோ பைலட் சங்கத்தைச் சேர்ந்த நாயுடு பூஷன் தத்தா கூறுகையில், “விசாரணை முடிவடைவதற்கு முன்பே, சரக்கு ரயில் டிரைவர் தான் விபத்துக்கு காரணம் என கூறுவதை ஏற்க முடியாது. லோகோ பைலட்டுகளுக்கான, 18,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பாமல், பணியில் உள்ள லோகோ பைலட்டுகளை கூடுதல் நேரம் வேலை வாங்குகின்றனர்,” என்றார்.