ஆந்திர முதல்வராக நான்காவது முறை... பதவியேற்றார் சந்திரபாபு பாபு நாயுடு
ஆந்திர முதல்வராக நான்காவது முறை... பதவியேற்றார் சந்திரபாபு பாபு நாயுடு
ஆந்திர முதல்வராக நான்காவது முறை... பதவியேற்றார் சந்திரபாபு பாபு நாயுடு
ADDED : ஜூன் 13, 2024 01:50 AM

அமராவதி, ஆந்திர முதல்வராக, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக நேற்றுபதவியேற்றார். நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், துணை முதல்வராக பதவியேற்றார்.
ஆந்திராவில் மொத்தமுள்ள, 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 லோக்சபா தொகுதிகளுக்கும், மே 13ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
இதில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜனசேனா, பா.ஜ., ஆகியவை, 164 இடங்களில் வென்றன.
இதில், தெலுங்கு தேசம் மட்டும் பெரும்பான்மையை தாண்டி, 135 தொகுதிகளையும்; ஜனசேனா, 21; பா.ஜ., எட்டு தொகுதிகளையும் கைப்பற்றின.
காங்., தோல்வி
ஆளுங்கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்., வெறும் 11 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத நிலையில் படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், காங்., தோல்வி அடைந்தது.
இந்நிலையில், அமராவதி மாவட்டத்தில் புதிய அரசின் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. அப்போது, ஆந்திர முதல்வராக, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, கவர்னர் எஸ்.அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, ஆந்திர துணை முதல்வராக, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பதவியேற்றார். மேலும், சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.,வுமான நர லோகேஷும் அமைச்சராக பதவியேற்றார். தொடர்ந்து, 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா, நிதின் கட்கரி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., நடிகர்கள் ரஜினி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆந்திர சட்டசபையின் பலத்தின்படி, அமைச்சரவையில் முதல்வர் உட்பட 26 அமைச்சர்கள் இருக்கலாம். தற்போது, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிக்கு, அமைச்சரவையில் மூன்று இடங்களும், பா.ஜ.,வுக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன.
கரகோஷம்
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில், எட்டு பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்; எஸ்.சி., சமூகத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் எஸ்.டி., சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இடம் பெற்றுள்ளனர். மேலும், அமைச்சரவையில் மூன்று பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.
ஆந்திர முதல்வராக பதவியேற்றதும், பிரதமர் மோடியிடம், சந்திரபாபு நாயுடு வாழ்த்து பெற்றார். அப்போது, அவரை ஆரத்தழுவி பிரதமர் மோடி வாழ்த்தினார்.
தொடர்ந்து, பவன் கல்யாண் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியிடம் உரையாடிய பிரதமர் மோடி, இருவரது கைகளை பிடித்து மேலே உயர்த்தி வாழ்த்தினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். பின், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., நடிகர் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ஆகியோருடனும் பிரதமர் மோடி சிறிது நேரம் பேசினார்.
சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதவில், 'ஆந்திராவில் முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு, அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இதற்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு, 'தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., அரசு, மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியை வழங்க பாடுபடும்' என்றார்.