Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/  2 செயற்கைக்கோள்களை பிரிக்கும் முயற்சி...வெற்றி! இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை

 2 செயற்கைக்கோள்களை பிரிக்கும் முயற்சி...வெற்றி! இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை

 2 செயற்கைக்கோள்களை பிரிக்கும் முயற்சி...வெற்றி! இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை

 2 செயற்கைக்கோள்களை பிரிக்கும் முயற்சி...வெற்றி! இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் சாதனை

ADDED : மார் 14, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்து சாதித்த இஸ்ரோ, அவற்றை பிரிக்கும் முயற்சியையும் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.

விண்வெளித் துறையில், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது; இத்துடன், பல புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

விண்வெளியில் நமக்கென தனியாக விண்வெளி ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக இஸ்ரோ ஆலோசித்து வருகிறது. இதைத் தவிர, அடுத்தகட்டமாக, 'சந்திரயான் - 4' செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களுக்கு உதவும் வகையில், விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும், 'டாக்கிங்' முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டது. இதற்காக, 'ஸ்பேடெக்ஸ்' என்ற பெயரில் முயற்சிகள் நடந்தன.

கடந்தாண்டு டிச., 30ல், பி.எஸ்.எல்.வி., - சி60 ராக்கெட் வாயிலாக, மற்ற செயற்கைக்கோள்களுடன் டாக்கிங் முயற்சிக்காக இரண்டு செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.

தலா 220 கிலோ எடையுள்ள இந்த இரண்டு செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஒன்றிணைக்கும் முயற்சி பல கட்டங்களாக நடந்தன. பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஜன., 16ல் இரண்டு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன.

இதன் வாயிலாக, அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து, விண்வெளியில் இரண்டு செயற்கைக்கோள்களை இணைத்த பெருமை நம் நாட்டுக்கு கிடைத்தது.இதன் தொடர்ச்சியாக, இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் தனியாக பிரிக்கும் முயற்சி துவங்கியது.

இந்த முயற்சி வெற்றி கரமாக முடிந்துள்ளதாக, இஸ்ரோ நேற்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் சிலமுறை இரண்டு செயற்கைக்கோள்களையும் இணைப்பது மற்றும் பிரிப்பது நடக்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், 'விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைப்பது மற்றும் பிரிப்பது ஆகிய நடவடிக்கைகள், நம் நாட்டின் எதிர்கால விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

எதிர்காலத்தில் நாம் சொந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அமைக்க உள்ளோம். அதற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.

இஸ்ரோ தலைவர் விளக்கம்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது:பல செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுத்தி, ஒருங்கிணைக்கும் திட்டத்தின் சோதனை முயற்சியாக, 'ஸ்பேடெக்ஸ் - ஏ, ஸ்பேடெக்ஸ் - பி' இரு செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன. அவை, புவி வட்டப்பாதையில் ஒன்றை ஒன்று பின்தொடர்ந்து வந்தன. இரு செயற்கைக்கோள்களும் ஒன்றுடன் ஒன்று வெற்றிகரமாக இணைக்கப்பட்டன. தற்போது, இரு செயற்கைக்கோள்களையும் தனித்தனியே பிரிக்கும் முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது. இந்த ஆய்வை முதல் முறையாக இஸ்ரோ செய்து, உலகில் நான்காவது நாடாக இந்த சாதனையை படைத்துஉள்ளது. சந்திரயான் - 4 திட்டத்தை செயல்படுத்தும்போது, இரு செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்படும். ஒன்று நிலவில் இருந்து கனிமங்களை எடுத்து வரும். அதை மற்றொன்று பூமிக்கு எடுத்து வரும். இதற்கும், மனிதனை விண்ணுக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தை செயல்படுத்தவும், விண்ணில் செயற்கைக்கோள்களை அனுப்பி ஒன்றிணைத்து பிரிக்கும் முயற்சி அவசியம். இதற்கான சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us