தேவகவுடாவின் மற்றொரு பேரனும் பாலியல் வழக்கில் கைது; 'இது வேற மாதிரி' புகார்
தேவகவுடாவின் மற்றொரு பேரனும் பாலியல் வழக்கில் கைது; 'இது வேற மாதிரி' புகார்
தேவகவுடாவின் மற்றொரு பேரனும் பாலியல் வழக்கில் கைது; 'இது வேற மாதிரி' புகார்
ADDED : ஜூன் 24, 2024 07:35 AM

பெங்களூரு : கர்நாடகாவில், ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணன் சூரஜ், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது, வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவாகி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு செயல்படும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர், முன்னாள் பிரதமர் தேவகவுடா.
இவரது மூத்த மகன் ரேவண்ணாவின் முதல் மகன் சூரஜ், 36. இவர் ம.ஜ.த., -- எம்.எல்.சி.,யாக உள்ளார். கடந்த 21ம் தேதி சூரஜின் ஆதரவாளர் சிவகுமார் என்பவர், ஹொளேநரசிபுரா போலீசில், அரிசிகெரேயை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் மீது புகார் அளித்தார். புகாரில், 'சூரஜை மிரட்டி, 5 கோடி ரூபாய் பறிக்க முயற்சிக்கிறார்' என்று கூறியிருந்தார்.
இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அரிசிகெரே வாலிபர் நேற்று முன்தினம் மாலை, ஹொளேநரசிபுரா போலீசில், சூரஜ் மீது பாலியல் புகார் அளித்தார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: சூரஜை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக, என் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சூரஜை நான் மிரட்டவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, அரிசிகெரேயில் ம.ஜ.த.,வுக்காக பிரசாரம் செய்தேன். இதனால், என்னை சூரஜ் பாராட்டினார். அவரது மொபைல் நம்பரை என்னிடம் கொடுத்தார்.
கடந்த 16ம் தேதி என்னிடம் மொபைல் போனில் பேசினார். 'ஹொளேநரசிபுரா அருகே உள்ள கன்னிகடா பண்ணை வீட்டில் இருக்கிறேன்; அங்கு வா' என என்னிடம் கூறினார். நானும் அங்கு சென்றேன். சூரஜ் தவிர அங்கு யாரும் இல்லை. முதலில் என் தோள் மீது கையை போட்டார். பின், என் உடலை தடவி பாலியல் தொல்லை கொடுத்தார். தொடர்ந்து, என்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டார்.
இதுகுறித்து சூரஜின் நெருங்கிய நண்பர் ஷிவு என்பவரிடம் கூறினேன். என்னிடம் பேசிய சூரஜ், 'பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம். 1 கோடி ரூபாய் பணமும், வேலையும் வாங்கித் தருகிறேன். இதையும் மீறி வெளியே சொன்னால், சும்மா விட மாட்டேன்' என மிரட்டினார். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின்படி, சூரஜ் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவானது.
இந்நிலையில் அரிசிகெரே வாலிபர், தன்னை மிரட்டியது தொடர்பாக புகார் அளிக்க, ஹாசன் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு சூரஜ் சென்றார். அப்போது, வாலிபருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, சூரஜிடம் இரவு முழுதும் விசாரணை நடத்தப்பட்டது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சூரஜ் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரணைக்கு, மாநில அரசு ஒப்படைத்தது. நேற்று ஹாசன் அரசு மருத்துவமனையில் சூரஜ்க்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின் அவர் போலீஸ் ஜீப்பில் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டார்.
பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வீட்டில் அவரை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சூரஜின் தம்பி பிரஜ்வல், ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.