பீஹாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது
பீஹாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது
பீஹாரில் மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது
ADDED : ஜூன் 24, 2024 12:52 AM

மோதிஹரி : பீஹாரில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த சிறிய பாலம், நேற்று இடிந்து விழுந்தது. ஒரே வாரத்தில் மூன்றாவது பாலம் இடிந்து விழுந்துஉள்ளது, அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீஹார் மாநிலம் கிழக்கு சம்கரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹரி பகுதி யில், ஹம்வா கிராமத்திற்கு செல்லும் வழியில் அங்குள்ள கால்வாயின் மீது சிறிய பாலம் கட்டும் பணியை, 1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில ஊரகப் பணிகள் துறை மேற்கொண்டது.
இந்த நிலையில் நேற்று இந்த பாலம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து ஊரகப் பணிகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் தீபக் குமார் சிங் கூறுகையில், “இந்த பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து முழுவிபரம் தெரியவில்லை. எனினும், இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
''மாவட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, விபத்திற்கான காரணத்தை கண்டறிந்து உரிய அறிக்கை தாக்கல் செய்வர்,” என்றார்.
சில நாட்களுக்கு முன் இங்குள்ள அராரியா பகுதியில் பக்ரா ஆற்றின் மீது, 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருந்த பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.
இதேபோல் நேற்று முன் தினம் சிவான் மாவட்டத்தில் உள்ள கண்டாக் கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. ஒரே வாரத்தில் மூன்று பாலங்கள் இடிந்து விழுந்தது, பீஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.