/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெங்களூரு கோர்ட்டில் ஆஜர் ராகுலுக்கு கிடைத்தது ஜாமின் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர் ராகுலுக்கு கிடைத்தது ஜாமின்
பெங்களூரு கோர்ட்டில் ஆஜர் ராகுலுக்கு கிடைத்தது ஜாமின்
பெங்களூரு கோர்ட்டில் ஆஜர் ராகுலுக்கு கிடைத்தது ஜாமின்
பெங்களூரு கோர்ட்டில் ஆஜர் ராகுலுக்கு கிடைத்தது ஜாமின்
ADDED : ஜூன் 08, 2024 12:04 AM

பெங்களூரு: பா.ஜ., தொடர்ந்த மான நஷ்ட வழக்கில், காங்., - எம்.பி., ராகுல் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமின் பெற்றார்.
கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, அப்போதைய மாநில பா.ஜ., அரசு 40 சதவீதம் கமிஷன் பெற்றதாக, காங்கிரஸ் தரப்பில் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து குற்றஞ்சாட்டினர்.
அவகாசம்
அதில், அதிகாரிகள் இடமாற்றத்துக்கு குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, விலை பட்டியலும் இடம்பெற்றிருந்தது.
தேர்தல் பிரசாரத்திலும் 40 சதவீதம் குற்றச்சாட்டை, காங்., தலைவர்கள் ராகுல், சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் சுமத்தினர். இதனால், இவர்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், பா.ஜ., சார்பில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில், கடந்த ஏப்ரல் 29ம் தேதி நேரில் ஆஜராகும்படி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், காங்., - எம்.பி., ராகுல் உட்பட சிலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
லோக்சபா தேர்தல் நடப்பதால், கால அவகாசம் கேட்டிருந்தனர். நீதிமன்றமும் அவகாசம் அளித்தது.
தேர்தல் முடிந்த நிலையில், முதல்வர், துணை முதல்வர், கடந்த 1ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமின் பெற்றனர். ஜூன் 7ம் தேதி ஆஜராகும்படி ராகுலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி இவ்வழக்கு, நீதிபதி சிவகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. டில்லியில் இருந்து நேற்று பெங்களூரு வந்த ராகுல், காலை 10:30 மணிக்கு, சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, தனக்கு ஜாமின் வழங்கும்படி ராகுல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
போலீஸ் பாதுகாப்பு
அவருக்காக, முன்னாள் எம்.பி., சுரேஷ், 75 லட்சம் ரூபாய் உத்தரவாத சொத்து பிணையம் வழங்கினார்.
பின், ஜாமின் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டு, நீதிமன்றத்தில் இருந்து ராகுல் சென்றார். அவருடன் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.
ராகுல் வருகையை ஒட்டி, நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவரை பார்ப்பதற்காக, சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் நின்றிருந்தனர். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.