Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'விண்டோஸ்' இயங்குதள கோளாறு விமான பயணியர் நேற்றும் அவதி

'விண்டோஸ்' இயங்குதள கோளாறு விமான பயணியர் நேற்றும் அவதி

'விண்டோஸ்' இயங்குதள கோளாறு விமான பயணியர் நேற்றும் அவதி

'விண்டோஸ்' இயங்குதள கோளாறு விமான பயணியர் நேற்றும் அவதி

ADDED : ஜூலை 21, 2024 06:15 AM


Google News
புதுடில்லி : 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் 'விண்டோஸ்' இயங்குதளத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்ட போதும், டில்லி உள்ளிட்ட சில விமான நிலையங்கள் வழக்கம் போல் இயங்கவில்லை.

அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தை, உலகம் முழுதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த இயங்குதளத்தில் நேற்று முன்தினம் கோளாறு ஏற்பட்டதால், நம் நாடு உட்பட உலகம் முழுதும் விமான சேவை, வங்கி சேவை உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

பாதிப்பு குறித்து விளக்கமளித்த மைக்ரோசாப்ட், 'விண்டோஸ் இயங்குதளத்தில் பிரச்னை இல்லை. கிரவுட்ஸ்ட்ரைக் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களே குளறுபடிக்கு காரணம்' என தெரிவித்தது.

இந்நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தில் ஏற்பட்ட பிரச்னை நேற்று சரி செய்யப்பட்டது. எனினும், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணியர் சிரமங்களை எதிர்கொண்டனர்.

விமான நிலையத்தில் தானியங்கி செல்ப் டிராப் பேக்கேஜ், செக் - -இன் இயந்திரங்கள் செயல்படாததால், முனையம் 3ல் உள்ள கேட் எண் 5க்கு வெளியே, நீண்ட வரிசையில் பயணியர் காத்திருந்தனர்.

மேலும், சர்வதேச பயணியருக்கு போர்டிங் பாஸ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நேற்றும், போர்டிங் பாசில் பேனாவால் ஊழியர்கள் எழுதி தந்தனர். விமான நிலையத்தில் உள்ள மின்னணு தகவல் பலகையில், விமான புறப்பாடு நேரம், வருகை நேரம், காத்திருப்பு நேரம் உள்ளிட்ட விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

டில்லி, பெங்களூரு விமான நிலையங்களை காட்டிலும், மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் வழக்கம் போல் செயல்பட்டது.

'சில செயல்பாடுகள் வழக்கம் போல் செயல்பட்டாலும், ஒட்டு மொத்த அமைப்பும் முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பவில்லை' என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்ட அறிக்கையில், 'நேற்று அதிகாலை 3:00 மணி முதல், விமான நிலையங்கள் வழக்கம் போல் செயல்படுகின்றன. விமான செயல்பாடுகள் சீராக நடக்கின்றன' என குறிப்பிடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us