வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்; மீட்பு பணிகளில் விமானப்படை வீரர்கள்
வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்; மீட்பு பணிகளில் விமானப்படை வீரர்கள்
வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்; மீட்பு பணிகளில் விமானப்படை வீரர்கள்
UPDATED : ஜூலை 03, 2024 02:15 AM
ADDED : ஜூலை 03, 2024 12:51 AM

குவஹாத்தி அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, இந்திய விமானப் படையினர் துணிச்சலாக மீட்டனர்.
நான்கு நாட்கள்
வட கிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் அருணாச்சலில், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் மட்டும், 19 மாவட்டங்களில், 6.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றுத் தீவில் கடந்த நான்கு நாட்களாக, 13 மீனவர்கள் சிக்கித் தவித்தனர்.
இவர்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், இறுதியாக, நம் விமானப் படையின் உதவியை நாடியது. இதையடுத்து மோகன்பாரி விமான தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்களை அனுப்பிய விமானப்படை, மீனவர்களை பத்திரமாக மீட்டது.
பிரத்யேக படகு
இந்த சவாலான பணியை, நம் விமானப் படை வீரர்கள் துணிச்சலாக செய்தனர். மீட்கப்பட்ட மீனவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதே போல், தேமாஜி மாவட்டத்தில் உள்ள ஜோனாயி என்ற இடத்தில், மணல் திட்டில் சிக்கித் தவித்த, மாநில பேரிடர் மீட்புப் படையின் எட்டு வீரர்கள் மற்றும் ஒரு வருவாய் அதிகாரியையும், நம் விமானப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
அருணாச்சலில், சாங்லாங் மாவட்டத்தின் தியுன் நகரில் உள்ள பிஜோய்பூர் என்ற கிராமத்தில் சிக்கித் தவித்த 70 மாணவர்கள், ஐந்து ஆசிரியர்கள் உள்ளிட்டோரை, அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த 11 வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள், பிரத்யேக படகுகளைப் பயன்படுத்தி பாதுகாப்பாக மீட்டனர்.
மிசோரமில் அய்ஸ்வால் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன.