கெஜ்ரிவால் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு
கெஜ்ரிவால் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு
கெஜ்ரிவால் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 07, 2024 07:22 PM
புதுடில்லி:டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்தக் கொள்கையை ரத்து செய்த துணைநிலை கவர்னர் சக்சேனா, பழைய கொள்கைப்படியே மது விற்பனை தொடர உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார்.
விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்தனர்.
இதற்கிடையில், இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாறம் குறித்து வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையும், சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது. ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மணீஷ் சிசோடியா டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு மார்ச் வரை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.,
ஆனால், தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது என, கெஜ்ரிவால் அவற்றை நிராகரித்தார்.
இதையடுத்து, மார்ச் 21ம் தேதி மாலை கெஜ்ரிவால் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், அன்று இரவு அவரைக் கைது செய்தனர்.
விசாரணைக்குப் பின் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, மே 10ம் தேதி 21 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இடைகால ஜாமின் காலம் நிறைவடைந்து கடந்த 2ம் தேதி, திஹார் சிறையில் கெஜ்ரிவால் சரண் அடைந்தார்.
இதற்கிடையில், இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தார். அதை நிராகரித்த நீதிபதிகள் விசாரணை நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தினர்.
தன் இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அதுவும் நிராகரிக்கப்பட்டது.
அதேநேரத்தில், சிறப்பு நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமின் மனு, நீதிபதி காவேரி பஜ்வா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை வழக்கறிஞர், இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக கூறினார்.
இதையடுத்து, விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி காவேரி பஜ்வா உத்தரவிட்டார்.