நடிகை சுமலதாவுக்கு எம்.எல்.சி., 'சீட்?'
நடிகை சுமலதாவுக்கு எம்.எல்.சி., 'சீட்?'
நடிகை சுமலதாவுக்கு எம்.எல்.சி., 'சீட்?'
ADDED : ஜூன் 01, 2024 06:44 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியை விட்டுக் கொடுத்ததால், சுயேச்சை எம்.பி.,யும், நடிகையுமான சுமலதாவுக்கு, மேலவை தேர்தலில் 'சீட்' வழங்க பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா. தற்போதைய லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்தது. இதனால் அதிருப்தியில் இருந்தாலும், மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக, தொகுதியை விட்டுக் கொடுத்த சுமலதா, பா.ஜ.,விலும் இணைந்தார்.
30 பேர் விருப்பம்
இந்நிலையில், மேலவையில் 11 எம்.எல்.சி.,க்களின் பதவிக் காலம், ஜூன் 17ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல், ஜூன் 13ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய, ஜூன் 3ம் தேதி கடைசி நாள்.
இத்தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வதால், பா.ஜ.,வுக்கு சுலபமாக மூன்று இடங்கள் கிடைக்கும்.
இதில் போட்டியிட, மாநிலம் முழுதும் 30க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து, மாநில தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதில் இருந்து 15 பேர் பெயரை மட்டும் குறிப்பிட்டு கட்சி மேலிடத்துக்கு மாநில தலைமை பரிந்துரைத்தது. ஆனால் கட்சி மேலிடம், மேலும் குறைத்து அனுப்புமாறு அறிவுறுத்தியது.
இதையடுத்து ஒன்பது பேர் கொண்ட பட்டியலை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், தற்போதைய எம்.எல்.சி., ரவிகுமார், மாநில முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், முன்னாள் தேசிய பொது செயலர் சி.டி.ரவி, முன்னாள் அமைச்சர் மாதுசாமி, மகளிர் பிரிவு தலைவி மஞ்சுளா, சுமலதா, பேராசிரியர் நாகராஜ், கீதா, மாளவிகா அவினாஷ் என ஒன்பது பேர் இடம் பெற்றிருந்தனர்.
3 பேர் தேர்வு
பெயர்களை கட்சி மேலிடம் நேற்று முன்தினம் பரிசீலித்தது. ரவிகுமார், சுமலதா, பேராசிரியர் நாகராஜ் ஆகிய மூவரை தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கான ஒப்புதல் பெற, கட்சியின் தேர்தல் கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் பரிசீலித்த பின், இன்று (ஜூன் 1ம் தேதி) வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
கட்சியின் விருப்பத்தை ஏற்று, மாண்டியா லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் இருந்ததற்காக சுமலதாவுக்கும்; 2022ல் கட்சி மேலிட உத்தரவின்படி, மேலவை தேர்தலில் போட்டியிடாமல் இருந்ததற்காக, கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் நாகராஜுக்கும்;
மேலவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக உள்ள ரவிகுமார், கட்சியின் ஏற்றம், தாழ்வு என பல சந்தர்ப்பங்களில், உடன் நின்றிருந்ததற்காகவும் தேர்ந்தெடுத்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.